அகதிகள் என்ற போர்வையில் ஜமாத் உல் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

டெல்லியில் தீவிரவாத தடுப்புப் படை மற்றும் சிறப்பு அதிரடிப்படைகளின் மாநில தலைவர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் இன்று துவங்கியது.

இதில் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் யோகேஷ் சந்தர் மோடி பேசுகையில், வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜமாத் உல் முஜாகிதீன், இந்தியாவில் தமது தீவிரவாத செயல்களை அதிப்படுத்தி உள்ளதாகவும்,

இந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், வங்கதேச அகதிகள் என்ற போர்வையில் பீகார், கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளின் உதவியுடன், இந்த தீவிரவாத அமைப்பு ஒடுக்கப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேசிய புலனாய்வு அமைப்பின் IG அலோக் மிட்டல் கூறுகையில், ISIS தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 127 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் 33 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 19 பேரும், கேரளாவில் 17 பேரும், தெலங்கானாவில் இருந்து 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தூதரகம் மூலம் பணம் பெற்று வந்த ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 Shares