‘தற்போது பிரபாகரனுக்குப் பதிலாகச் சுமந்திரன் தலைமையிலான அணியினர் செயற்பட்டு வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியைப் பின்னிருந்து சுமந்திரனே இயக்கிவருகிறார். சுமந்திரனின் நிழலில் இயங்கும் அணியிடமும் நிழல் பிரதமராகச் செயற்படுகின்ற சம்பந்தனிடமும் நாட்டைக் கையளிப்பதற்கு நாம் தயாராக இல்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து புலி-யானை கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து இட்டுள்ளதாகவும் இதனால் நாடு ஒன்பது துண்டுகளாகப் பிளவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்தவும் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களும் சிங்கள மக்களுக்கான எச்சரிக்கை ஒன்றினைப் பிறப்பித்துள்ளனர்.

தெற்கில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின் போது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்துகொண்டதாகக் கூறப்படுகின்ற விடயங்களைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றமையால் கொதிப்படைந்துள்ள மஹிந்த தரப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் இனவாத அரசியலில் இமாலயம் தொடுகின்றனர். இவ்வாறான இனவாதக் கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கின்றவர்களே வாக்கு வங்கியை அதிகரிக்கலாம் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு இந்த இரு அணியினரும் தேர்தல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் மஹிந்தவிற்கு ஏற்பட்ட காலத்தில் த.தே.கூட்டமைப்பின் ஆதரவை அவரும் கோரியிருந்தார். மஹிந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அழைத்துப் பேசினார். அவ்வாறு ஆதரவளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் நடுநிலமை வகிக்குமாறு கேட்டுள்ளார். இதேபோல், பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரும் சம்பந்தரின் வீட்டுக் கதவைத் தட்டி தமக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுள்ளனர்.

மஹிந்த குடும்பத்தின் அழைப்பை ஏற்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளது. இதனால் அதிர்ப்தி அடைந்துள்ள நிலையில்

தெற்கில் இனவாத பூதக்கதைகளை சிங்களப் பேரினவாதிகள் கக்குகின்றனர்.தமக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கவில்லை என்பதால் சுமந்திரன் தலைமையிலானவர்களை தேசியத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்புபடுத்தி இனவாத அரசியல் பேசியுள்ளனர். 

இதுவே த.தே. கூட்டமைப்பு மஹிந்த, மைத்திரியின் சொல்லைக் கேட்டிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெற்கில் புலிப் பூஞ்சாண்டி இனவாத அரசியலைச் செய்திருப்பார்கள்.

இதேவேளை, பிரபா-ரணில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய விடயம் அக்காலத்தில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவுக்குத் தெரியாது என்றும் இந்த ஒப்பந்தத்திற்கு நிகரான யானை-புலி ஒப்பந்தம் ஒன்றில் மீண்டும் ரணிலும் தற்போதய பிரபாகரனான சுமந்திரனும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் போரினவாதிகள் கூச்சல் இட்டுள்ளனர். 

இது உண்மையில் அப்பட்டமான பொய். சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் புலிகளின் (தமிழரின்) பலம் ஓங்கியிருந்ததால் சிங்களம் தம்மைப் பாதுகாக்கும் நோக்குடன் பிரபா-ரணில் ஒப்பந்தத்தில் கபடத்தனமாகக் கைச்சாத்திட்டது. அந்த ஒப்பந்த காலத்தில் சிங்கள இராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் சிங்கள இளைஞர்கள் அதிகளவில் படையில் இணைக்கப்பட்டனர். புலிகளின் ஆயுத பலத்திற்கு நிகரான நவீன ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. புலிகளின் கட்டமைப்புக்களை சூழ்ச்சியால் சிதைப்பதற்கு முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதன் பின்னர் ஆட்சியில் அமர்ந்த மஹிந்த குடும்பத்தினரே போரில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஆனால் இன்று மஹிந்த தரப்பினர் அனைத்தையும் மாற்றி புலி-யானை ஒப்பந்தக் கதை புனைந்து தெற்கில் பௌத்த, சிங்களப் பேரினவாத அரசியலில் இமாலய வெற்றியை நோக்கி நகர்கின்றனர்.

இந்நிலையில் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் தற்பொழுது மீண்டும் பிரதமராகியுள்ள ரணில் விக்கிரமசிங்க, ‘தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாம் ஒற்றையாட்சிக்குள் பெற்றுக் கொடுப்போம். அதற்காக உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பை நிட்சயமாகக் கொண்டுவருவோம். இந்நிலைப்பாட்டில் இருந்து நாம் இன்னமும் மாறவில்லை.’ என்று தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியும் அரசாங்கமும் இருவேறு துருவங்களாகப் பயணிக்கின்ற நிலையில் 19ஆவது திருத்தத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய புதிய அரசியல் சீர்த்திருத்தங்களை சட்டமாக்குவது அவ்வளவு இலகுவான வியடம் அல்ல என்பது ஒருபுறம் இருக்க, ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கான காரணம் இதுவாகக்கூட இருந்திருக்கலாம் என்கின்ற சந்தேகங்களும் எழத்தான் செய்கின்றது.

இதேவேளை, சிறுபான்மை இனங்களுக்கான அரசியல் உரிமைகளை பகிர்ந்து அளிக்கவல்ல அரசியல் தீர்வுத் திட்டங்களுக்கான முனைப்புகள் கடந்த காலங்களில் இடம்பெற்ற சந்தர்பங்களில் அதனை மஹிந்த அணியினர் வன்மையாக எதிர்த்துள்ளமையும் தடுக்கும் நோக்குடன் பேரின வாத பௌத்த துறவிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முற்பட்டமையும் இங்கு உற்றுநோக்கப்பட வேண்டியவை.

இவ்வாறான ஒரு அரசியல் நிலையில் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. மாறாக சிங்கள, பௌத்த பேரினவாதிகள் இனவாத அரசியலை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து அதனூடாக அறுதிப் பொரும்பான்மை பலத்துடனான பாராளுமன்ற ஆட்சியை நிறுவுவதற்கான வழி ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறன நிலை ஏற்படுமாயின் எமது தலைமுறைக்குள் சிறுபான்மை இனங்களுக்கான அற்பசொற்ப சலுகைகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். 

இதனால் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள முற்றுமுழுதான தமிழ் இனச்சுத்திகரிப்பால் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் எந்தவொரு பிரதேசத்திலும் நிம்மதியாக, வாழ்வியல் உரிமைகளுடன், தமிழன் என்ற அடையாளத்துடன் வாழவே முடியாத நிலை ஏற்படலாம் என்பதை எமது சமகாலத் தமிழ்த் தலைமைகளுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.

‘இராவணன்’

234 Shares