அனைத்து பயங்கரவாதிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வாக்குறுதி அளித்துள்ளது.

பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவின் கூட்டணி நாடாக திகழும் பாகிஸ்தான், தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. காஷ்மீர் மாநிலம் புலவாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி முகமது குரேஷியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினர்.

அதனை தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை குறித்து, ஜான் போல்டன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜெய்ஷ் இ முகமது மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் மீது அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினேன். அதனை ஏற்றுக்கொண்ட முகமது குரேஷி, அனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும், இந்தியா உடனான பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்துள்ளார்” என குறிப்பிட்டார்.