எமது நாட்டில் வடகிழக்கில் முப்பது ஆண்டுகளாக இடம்பெற்றிருந்த யுத்தத்தினால் எமது மக்கள் வலிகளை அனுபவித்தவர்கள். அதன் சுமைகளை இன்றும் அனுபவித்து கொண்டே இருக்கிறார்கள். உயிரிழப்பையும், உடமைகளையும் யுத்தத்தினாலே இழந்திருந்தனர். உயர் பாதுகாப்பு வலயங்களினால், மக்களினது வாழ்விடங்கள், வணக்கஸ்தலங்கள், விளைநிலங்கள், பொது கட்டிடங்கள் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகினர்.

எமது மக்களின் வாழ்வாதாரங்கள் சீரழிக்கப்பட்டன , எத்தனையோ பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டனர். யுத்தத்தினால் நிர்க்கதியாகிய மக்கள், தமது வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு வாழ்வாதாரத்தை இன்னமும் எதிர்பார்க்கிறார்கள். ஏன்? யுத்தம் காரணமாக இன்று சமூக வாழ்வில் அல்லல் படும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், அங்கவீனமானவர்கள், தந்தை தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள், என ஏராளமானோர் இன்றும், யுத்தத்தின் வடுக்களாக, யுத்தத்தை விட கொடியதாக காணப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மக்களின் கல்வி, கலாச்சாரம் என்பன பலவருடங்களுக்கு பின் தள்ளப்பட்டுள்ளன. எமது வருங்கால தலை முறையினரின் நலனை கருதி நாம் இவற்றை மாற்றியமைக்க வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்து 10ஆண்டுகள் கடந்தும் இந்த அரசாங்கம் நல்லாட்சி என்று சொல்லி கொள்வதைத் தவிர, எமது எதிர்பார்ப்புக்கள் ஏதும் பூர்த்தி செய்யப்படவில்லை.

யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதலோ, காணாமல் போனோரின் சான்று பதிவுகளோ எவையும் இதுவரை கிடைக்கபெறாத நிலையில், அவர்களில் தங்கி வாழ்கின்றவர்கள் தமக்கான சட்ட ரீதியான ஆவணங்களை கூட ஜனநாயக நாட்டில் பெற்று கொள்ள முடியாது வாழ்ந்து வருகின்றனர்.

இந்தபாராளுமன்றில் நட்ட ஈட்டு சட்டமூலம் 2018, ஒக்டோபர்மாதம்அங்கீகரிக்கப்பட்டு, 700 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்ட போதிலும், அது செயற்படுத்தபடாத நிலையே காணப்படுகின்றது.

காணாமல் ஆக்கபட்டோருக்கு மாதாந்தம் 6000 ரூபாகொடுப்பனவு,இதன் அடிப்படையில் 72000 ரூபா குடும்பத்திற்கு வருடாந்த நட்ட ஈடாக கிடைக்கும். எனவே இதை முதற் படியாக எடுத்து கொண்டாலும், 500 மில்லியன் ரூபா நிதியானது ஒரு வருடத்திற்கு 7000 குடும்பங்களுக்குமட்டுமே போதுமானது.

எம் உறவுகளை தொலைத்துவிட்டு, அவர்களுக்காக தெருத்தெருவாக நீதி கேட்டுப்போராடிக் கொண்டு இருப்பது மாதாந்த 6000 ரூபா கொடுப்பனவுக்காகவா? இதுவா எம்மவர் என்று சொல்லி கொள்பர்கள், எமக்கு பெற்று தந்த நிரந்தரதீர்வு?அல்லது இதுவும் வரும் தேர்தலுக்கான சலுகையா?

10 வருடங்கள் கடந்தும், பொதுமக்களின் சட்ட ரீதியிலான காணிகள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நேரடி வழிகாட்டலில் வடக்கு கிழகிற்கான ஜனாதிபதி செயலணியினால் 90.41சதவீதமான தனியார் காணிகளும்,79.16சதவீதமான அரச காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் விடுவிக்காத காணிகள் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படா வகையில் மீள் அமைப்பதற்கு, இலங்கை இராணுவத்திற்கு2000 மில்லியனும், கடற்படைக்கு 155 மில்லியனும் தேவைப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வரவு செலவு திட்டத்தில் 40 பில்லியன் ரூபா பாதுகாப்பு செலவீனமாகஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து 2155 மில்லியன் ரூபாவை ஒதுக்கினால் மீள்குடியேற்றம் விரைவாக முன்னெடுக்கமுடியும்.
மயிலிட்டி மீன்பிடி துறைமுக நிர்மாண ஆரம்ப விழாவின்போது உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், விளைநிலங்கள் முதற்கட்டமாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்ததை நான் வரவேற்கிறேன்.

ஆனாலும் வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை ஆரம்ப பாடசாலையானது, வசாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தில் கொட்டில்களில் இயங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு 400 க்கு மேற்பட்ட மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே 900 மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ வேலுப்பிள்ளை கல்லூரியிலேயே கல்வியை தொடர அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அச்சுவேலி, பருத்தித்துறை பகுதிகளில் இருந்து புற்றுநோய் சிகிச்சையைகாகயாழ்ப்பாணம் வருகை தந்து பின்னர், மீண்டும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகின்றது. எனவே வசாவிளான் கட்டுவன் சந்தி வரையிலான 2.5km வல்லை அராலி வீதி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

வட கிழக்கிலே யுத்தம் காரணமாக 165,000 முற்றாக அழிந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளது. இத் திட்டத்திற்காக பல்வேறு காலத்தில் பல்வேறு தரப்பினரால் பொருத்து வீடு, கல்வீடு, சுய வீடமைப்பு எனபல முன்னெடுப்புக்கள் செய்யப்பட்ட போதிலும், இதுநாள் வரைக்கும் எந்த விதமான வீடுகளும் நிர்மாணிக்கப்படவில்லை.
இவ்வருடம் வீடமைப்பு திட்டத்திற்காக ஏற்கனவேஒதுக்கப்பட்ட 4500 மில்லியனும், முன்மொழியப்பட்ட 5500 மில்லியனுமாக மொத்தம்10,000 மில்லியன் ரூபாவில்,15,000 கல்வீடுகள் நிர்மாணிப்பது எவ் வகையில் சாத்தியமாகும்?

எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு 30 வருடமாகியும் நட்டஈடு கூட வழங்காமையினால், குறைந்த பட்சம், இவ் வரவு செலவு திட்டத்தில் அதிகம் வரவேற்கப்பட்ட கனவு மாளிகை மற்றும் ‘home sweet home’திட்டங்களுக்கு வழங்கப்பட்டதை போன்றுதேசிய வீடமைப்பு அதிகார சபைஅல்லது மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சு மூலம் இலகு தவணைக் கடன் வசதிகளை இயலுமான எம் மக்களுக்கு வழங்குவதன் மூலம், வட்டி தொகையின் 75சத வீதத்தினை அரசாங்கம் பொறுப்பேற்று, மீள செலுத்தும் காலத்தினை 15 தொடக்கம் 25 வருடங்களாக நிர்ணயிப்பது, எம் மக்களிற்கு நன்மை அளிக்கும்.

நல்லிணக்கம் என்னும் பேரில் அரசாங்கம் காலத்திற்கு காலம் பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி பெரும் தொகையான நிதி செலவிடப்பட்டுள்ளது, இவ் வருடமும் கலை மற்றும் கலாச்சாரத்தின் ஊடான சமாதானத்திற்கான திட்டம்(ONUR),பிரதமரின் கீழ் இயங்கும் நல்லிணக்க பொறிமுறை ஒருங்கிணைப்பு செயலகம்(SCRM), “கடந்த காலத்தை மறப்போம் எதிர்காலத்தை கட்டி எழுப்புவோம் “என்னும் நிகழ்ச்சி திட்டம், மற்றும் காணமல் போன ஆட்கள் (OMP) அலுவலகம் போன்ற அமைப்புக்களுக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டங்களின் ஊடாக இது வரையில் ஏதாவது நன்மைகள் எமது மக்களுக்கு கிடைத்துள்ளனவா? பல்வேறு ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு இவ் அமைப்புக்களினால் எவ்வளவு தூரம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது? இவ் அமைப்புக்கள் தொடர்ந்தும் இயங்க வேண்டுமா? அதற்காக பெரும் தொகையான நிதி ஒதுக்கப்பட வேண்டுமா?வட கிழக்கு மக்களின் கேள்வியாகஇதுஇருக்கிறது.

பனை நிதியம் இதுவும் ‘கம்பெரலிய’ போல்அரசியல்மயபடுத்தபடுபட்டால்புலம் பெயர் உறவுகளின்பங்களிப்புதவறாகபயன்படுத்தபடவும்வாய்ப்புஉண்டு. நிதியத்திற்கு 2500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கபட்ட போதிலும், ஏன் இந் நிதியத்திற்கு கொடை வள்ளல்கள்,நலன் விரும்பிகள், விசேடமாக புலம் பெயர் உறவுகளிடமும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது? இதற்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு திறைசேரியில் நிதி இல்லையா? அல்லது நிதி ஒதுக்குவதற்குஉண்மையான அக்கறை இல்லையா…….? இதுவும் ‘கம்பெரலிய’ போல் அரசியல் மயபடுத்த பட்டால் புலம் பெயர் உறவுகளின் பங்களிப்பு தவறாக பயன்படுத்த படவும் வாய்ப்பு உண்டு.

கைத்தொழில் நிறுவனங்களான காங்கேசன்துறை சீமெந்து ஆலை, ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயன தொழில்சாலை, ஒட்டிசுட்டான் ஓட்டு தொழில்சாலை போன்ற கைத்தொழில் நிலையங்களின் மீள் புனரமைப்பிற்காக எந்தவொரு நிதி ஒதுக்கீடு செய்யாமை, யுத்தத்தினால் இருண்ட நிலையை அடைந்த மாவட்டங்களிற்கு ஒளியூட்டும் எண்ணம் அறவே இல்லை என்பதேயாகும்.

சிறுபான்மை மக்களின் வாக்குகளால் ஆட்சி பீடமேறிய அரசாங்கத்தை இன்னமும் எம்மவர்கள் பாதுகாத்து, எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாது, முன்னர் ‘அபிவிருத்தி வேண்டாம் அரசியல் தீர்வே வேண்டும்’ என்று கூறியவர்கள் வெறுமனே இந்த ‘கம்பெரலிய’போன்றஅற்பசலுகைகளுக்கு எம் மக்களை விலை பேசியுள்ளனர். வடகிழக்கு மக்களிற்கு எந்தவொரு பலனையும் தராத வரவு செலவு திட்டத்தை முழுமையாக ஆதரிப்பது நம்பிவாக்களித்த எம் மக்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகமாகும்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

( 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில்,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள், 2019-03-14 அன்று கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்)