டில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த ஜெயிஷ் இ முகமது இயக்கம் சதித்திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு முகமை சார்பில் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளான ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த சஜத் அகமதுகான், தன்வீர் அகமதுகனி, பிலால் அகமதுமிர், முசாபர் அகமதுபட் ஆகிய நான்கு பேருக்கு எதிராக கடந்த செப்,16ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

டில்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த குற்றப்பத்திரிகை தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இதில், பயங்கரவாதி சஜத் அகமதுகான், மார்ச் மாதம் டில்லியில் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில், புல்வாமா தாக்குதலுக்கு பின் டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம், தலைமை செயலகம், சிவில் லைன்ஸ், டட் காலனி, காஷ்மீரி கேட், லோதி எஸ்டேட், மண்டி ஹவுஸ், தரியாகஞ்ச், காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், அதற்காக இந்த பகுதிகளில் சுற்றித்திரிந்து நோட்டமிட்டதாகவும் சஜத்திடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.