சென்னையில் இருந்து சவுதி அரேபியா செல்லும் விமானத்தில் பெண் மனித வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10.40 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் இந்தியில் பேசிய ஒரு மர்ம நபர், ‘‘சென்னையில் இருந்து டெல்லி வழியாக சவுதிஅரேபியா செல்லும் விமானத்தில் ஷபினா என்ற பெயருடைய பெண் மனித வெடிகுண்டு பயணம் செய்கிறார். அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய பெயர் நஸ்ருதீன்’’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

துரிதமாக செயல்பட்டு சென்னையில் இருந்து வளைகுடா பகுதிகள் செல்லும் 12க்கும் மேற்பட்ட விமானங்களை தீவிரமாக சோதித்தனர். ஆனால் வெடி குண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

கியூ பிரிவு பொலிஸார் தனிப்படை ஒன்றை அமைத்து டெல்லி விமான நிலையத்துக்கு வந்த தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தனர். அந்த தொலைபேசி அழைப்பு தமிழ்நாடு, சேலம் அருகில் உள்ள ஓமலூரில் இருந்து வந்ததும் அந்த தொலைபேசி அருள்ராஜ் என்பவருக்கு சொந்தமானது எனவும் தெரியவந்ததுடன் அருள்ராஜ் என்ற வாலிபரின் வீட்டை நேற்று முற்றுகையிட்டனர்.

விசாரணையில், அது என்னுடைய தொலைபேசி எண் தான். ஆனால் தொலைபேசி திருடுபோய்விட்டது. இது சம்பந்தமாக நான் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளேன் எனக் கூறினார். ஆனால் புகார் செய்ததற்கான எந்த ஆதாரத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை.

எனவே, தனிப்படை பிரிவு பொலிஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். அவருடைய பின்னணி என்ன, அவர் தீவிரவாத பிரிவினருடன் தொடர்பு உடையவரா என விசாரிக்கின்றனர்.

13 Shares