இந்தி திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த் (வயது 57). இவர் 1980 மற்றும் 90-களில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த வீரா படத்தில் வில்லனாக வந்தார். விஜயகாந்துடன் பெரிய மருது படத்திலும் நடித்து இருந்தார்.

இந்தியில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, சஞ்சய்தத், சன்னி தியோல், கோவிந்தா ஆகியோர் படங்களிலும் வில்லனாக வந்தார். இந்தி நடிகை உஷா பச்சானியை 2000-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2 வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

அதன்பிறகு மும்பை வெர்சோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். கோவிந்தாவுடன் நடித்த ரங்கீலா ராஜா படம் கடந்த மாதம் வெளியானது. மகேஷ் ஆனந்த் வீட்டில் வேலை பார்க்கும் பெண் வழக்கம் போல் வீட்டில் வேலைக்கு சென்றபோது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் கதவை உடைத்து திறந்தபோது மகேஷ் ஆனந்த் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அருகில் மதுபாட்டில்களும் கிடந்தன. உடல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மகேஷ் ஆனந்த் மறைவுக்கு இந்தி பட உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

0 Shares