சர்வதேசக் கண்காணிப்பை நீடிக்கச் செய்து, உலகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு கட்டாயமாக நிறைவேற்றவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதற்கமைய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவளிக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“ஐ.நா. 34-1 தீர்மானத்துக்கமைய எழுத்து மூலமான அறிக்கை நாளை (இன்று) ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், சொந்த விவகாரங்களைத் தாமே கையாள்வதற்கு ஐ.நா.விடம் வேண்டுகோள் விடுக்கும் வகையில் 3 பிரதிநிதிகளை ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழப்பமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

உள்நாட்டு விவகாரங்களைத் தாமே கையாள்வதற்கு இலங்கைக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையிலேயே சர்வதேச விசாரணைக்குக் கட்டளையிடப்பட்டது.

அரசின் செயற்பாடுகளின் தாமதம் எம்மை ஏமாற்றமடையச் செய்துள்ளது. காணாமல்போனோர் அலுவலகம் நியமிக்கும் பணிகளிலும் மிகுந்த தாமதம் நிலவியது. ஆனால், இந்தத் தாமதங்களுக்கான காரணம்கூட முன்வைக்கப்படவில்லை.

இந்நிலையில், ஐ.நா.வின் புதிய தீர்மானம் இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அந்தத் தீர்மானத்தை ஏற்று அதற்கு இணை அனுசரணை வழங்கவேண்டும். அது இலங்கையின் கடப்பாடு.

இது தொடர்பாகவும் கூட்டமைப்புக்கு எதிராகப் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதாவது நாம் அரசுக்குக் கால அவகாசம் வழங்குவதாகத் தெரிவிப்பது முற்றிலும் பொய்யான பரப்புரை.

புதிய தீர்மானம் நிறைவேற்றப்படாவிடின் இந்த விடயங்களைச் சர்வதேச சமூகம் கையாள முடியாது. இதனையே ஜனாதிபதி கோருகிறார். ஆனால், இதற்கு இடமளிக்காது உலகத்துக்கு இலங்கை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்யப்படவேண்டும்” – என்றார்.