பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் இருந்து இராணுவப் புலனாய்வு அதிகாரியான பிரபோத சிறிவர்தன உட்பட மூன்று சந்தேக நபர்களை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கில் 9 சந்தேக நபர்களுக்கு நேற்றைய தினம் பிணை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரையின் படி சந்தேக நபர்கள் 12 பேரில் மூன்று பேருக்கு இவ்வாறு இன்றைய தினம் விடுதலை வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கலமாகிய கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி சிரேஷ்ட கேலிச்சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொட கடத்திச் செல்லப்பட்ட நிலையில் காணாமலாக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த வழக்கு விசாரணை கொழும்பின் புறநகரான ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இராணுவப் படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 12 பேர் சந்தேக நபர்களான இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 09 பேருக்கு நேற்றையதினம் பிணை அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இராணுவப் புலுனாய்வாளர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையிலேயே ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் எக்னலிகொடவின் கடத்தல் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது.

இதன்போது முன்னிலையாகியிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு இணங்க, வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான இராணுவத்தின் கிழக்கு புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது கட்டளை அதிகாரியான லெப்டினன் கேர்ணல் பிரபோத சிறிவர்தன, 10ஆவது மற்றும் 12ஆவது சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்திருப்பதாக மன்றில் தெரிவித்தனர்.

இதற்கமைய குறித்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும் இந்த வழக்கில் பிணை வழங்கப்பட்ட 09 சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.