இன்றய யாழ்ப்பாணத்தின் ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான உறவின் விரிசல் கண்டு மனம் பதை பதைக்கிறது ..
கல்வியியல் எதிர்காலம்மட்டுமல்ல ஒரு சந்ததியின் வாழிவியல் பற்றிய பயமும் கேள்வியம் மனதை வதைக்கிறது !

எங்கு தவறு ? … யார் தவறு ?…யாரில் தவறு ?

“தனது சுய விருப்பங்களை முன்னிறுத்துவோரை விட, பிறர்மீது அக்கறையும், அர்ப்பணிப்பு உணர்வும், பணியின் மீதுள்ள ஆழ்ந்த பற்றும் உடைய ஆசிரியரை உறுதிப்பாடு மிக்கவர்”
என்று எலியட் மற்றும் கிராஸ்வெல் கூறுகின்றனர்.

கல்விமுறையின் வலிமைமிக்க சக்தியாகத் திகழ்பவர் ஆசிரியர்.
ஆசிரியர் இல்லாத கல்வி, ஆன்மா இல்லாத உயிர், இரத்தமும் தசையும் இல்லாத எலும்புக்கூடு; உட்பொருள் இல்லாத நிழல் (Shadow Withoutsubstance) போன்றது.

1997 ஆம் ஆண்டு -கோட்ட மட்டம், மாவட்ட மட்டம் , மாகாணமட்டங்கலில் நடந்த விவாத போட்டிகளில் முதலிடம் பெற்ற ஸ்கந்தாவின் மூவர் அணி இப்போது தேசியமட்டத்திலும் வெற்றியீட்டி யாழ்ப்பாணம் திரும்புவதற்காய் கொழும்பில் விவேகானந்த மண்டபத்தில் வேறு வேறு போட்டிகளுக்காக வந்த வேறு பல ஆசிரியர்கள், மாணவர்களோடு தங்கியிருந்த நேரம் அது ..
உள்நாட்டுபோர் உச்சம் பெற்ற…கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகள், கைதுகள் , கடத்தல்கள் , காணாமல் போதல்களால் நாடு அல்லோலகல்லோல பட்ட நேரம் வேறு ..

என்றுமே சாந்த சொரூபனாய் , அமைதியின் வடிவமாய் திகழும் ஆசான் ஆறு திருமுருகன் சேர் அன்று மிகுந்த பதட்டத்தோடும் கவலையோடும் அடிக்கடி வாசலை பார்த்தவாறு உள்ளும் வெளியுமாய் நடந்து கொண்டிருந்தார் காலையில் வெளியே கோயிலுக்கு மிக அருகில் போவதாக அவரிடம்பொய் சொல்லி அனுமதி பெற்று போன அவரின் மாணவர்கள் மூவரும் சாயங்காலம் ஆகியும் இன்னும் இருப்பிடம் திரும்பவில்லை, இதனால் தான் அவர் இத்தனை பதட்டத்தில் …
ஆம் அவரின் மாணவர்கள் மூவரும் இப்போது ஒரு வழியாய் திரும்பி வந்து விட்டார்கள் .. மண்டபத்தில் இருந்த ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் நிஷாந்தன் , பாலா , உதயன் மூவரும் வந்துட்டாங்க சேர் என்றனர் கோரஸாக …
உள்ளே ஏதோ அலுவலாய் இருந்தவர் கையில் பெரிய தடியோடு வெளியே வந்தார் மூவருக்கும் அந்த தடியால் தரமான சாப்பாடு ..!
தடியும் தன் சேவையை கச்சிதமாய் செய்து சுக்கல்களாகி கிடந்து எங்களை பார்த்து சிரித்தது …
நாங்கள் மூவரும் கையை இறுக கட்டிய படி செய்த தவறுக்காய் தலைகுனிந்தபடி மௌனமாக அந்த அடிகளை வாங்கியபடி …
பிரபல எழுத்தாளர் கோகிலா மகிந்திரன் உட்பட யாழ் மாவட்டத்தின் பல பிரபல ஆசிரியர்கள் அங்கு அந்நேரம் எங்களோடு இருந்தனர் , அவர்கள் எல்லோருக்கும் உண்மையில் இதை பார்த்து வேர்த்தே போச்சு ….ஆச்சரியம் வேற …எப்படி இந்த பெரிய பொடியளுக்கு இவர் இப்படி அடிக்கிறார் ?
அவரிடம் வேறு கேட்டே விட்டார்கள் : புன்னகை தான் அவரிடம் இருந்து அவர்களுக்கான பதில் , எங்களை பார்த்தார்கள் நாங்களும் அதே புன்னகை தான் !
எங்களை பொறுத்தவரை சேர் எங்களுக்கு அடிப்பதை “ஸ்பரிஷ தீட்ச்சை ” என்றும் கோபமாய் அவர் முறைத்து பார்த்தால் “நயன தீட்ச்சை ” என்றும் மிகுந்த அன்போடும் அதீத மரியாதையோடும் அதே நேரம் நகைச்சுவையோடும் அவரோடு சேர்ந்தே நாங்கள் அனைவரும் சொல்லிகொள்ளுவோம் , அவரும் சிரித்து கொண்டே எங்கள் முதுகில் தட்டுவார் எங்களை தன்பிள்ளைகள் போலதான் எப்போதும் நடத்துவார் ,
அது தான் அவர் Art of Teaching
கண்டிக்கவேண்டிய இடங்களில் அதீத கண்டிப்பு
பாசம் காட்ட வேண்டிய இடங்களில் அதைவிட அதீத பாசம் ..அரவணைப்பு
எங்களுக்கும் அவர் மீதான அன்பு என்பது அளவுகோல் கடந்தது!
மரியாதை என்பது வயதுகள் கடந்தும் மாறாதது !

41 Shares