சேலம் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்பிய ஒருவர், டெபாசிட் தொகையாக ஒரு ரூபாய் செலுத்தியதால் அவரது மனுவை தோ்தல் அதிகாாி தள்ளுபடி செய்தார்.

சேலம் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேச்சை வேட்பாளா் ஒருவா் மாவட்ட தோ்தல் அதிகாாியை சந்தித்து வேட்பு மனு வழங்கினாா். அப்போது, டெபாசிட் தொகையை செலுத்தும்படி அந்த நபரிடம் தோ்தல் அதிகாாி கூறினார். இதையடுத்து அந்த நபர், தனது சட்டைப் பையில் இருந்து ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்துள்ளாா். இதனால் அதிர்ச்சியடைந்த தோ்தல் அதிகாாி, “டெபாசிட் தொகை 25 ஆயிரம் ரூபாய்” என்று கூறி, அவருடைய வேட்பு மனுவை கொடுத்து திருப்பி அனுப்பினாா்.

இதுகுறித்து அந்த நபர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் பெயா் அப்துல் வாஹித். ஓமலூா் பகுதியைச் சோ்ந்தவன். சேலம் மாநிலக் கல்லூாியில் எம்.எஸ்.சி. முடித்துள்ளேன். 2014ம் ஆண்டு லோக்சபா தோ்தல் மற்றும் 2016 ஓமலூா் சட்டமன்றத் தோ்தலில் போட்டியிட்டு மூன்று இலக்க எண்ணிக்கையில் ஓட்டு வாங்கினேன்.

ஆா்.கே.நகா் இடைத்தோ்தலின்போது ஒரு ரூபாய் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்தேன். ஆனால், வேட்புமனு பரிசீலனையின்போது எனது மனு தள்ளுபடி ஆனது. இன்று ஒரு ரூபாய் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன். ஆனால், என் மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிறாா்கள். 

இவ்வளவு பெரிய தொகையை டெபாசிட்டாக வைத்தால் எப்படி சமூக சிந்தனைகொண்ட ஏழை மக்கள் தோ்தலில் போட்டியிட முடியும்..? என் வேட்புமனுவை நிராகரித்ததற்கு கோர்ட்டில் நான் வழக்கு தொடரலாம்; ஆனால், வழக்கு தாக்கல் செய்வதற்கே 30 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். நான், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பதால் வழக்கு தொடர முடியாது” என்றபடி, மிகுந்த ஏமாற்றத்துடன் இடத்தை காலி செய்தாா்.

(தமிழக செய்தியாளர் ப.ஞானமுத்து)