தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியறியும் சங்கத்தினரால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கந்தசுவாமி கோவிலில் இருந்து ஆரம்பமான இவ் ஊர்வலமானது வவுனியா பஜார் வீதி ஊடாக வவுனியா தபால் அலுவலகத்திற்கு அருகில் காணாமல் போன உறவுகளினால் 785 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகையில் முடிவடைந்ததுடன், அவ்விடத்தில் காணாமல் போன உறவினர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது தமிழர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட இனவளிப்பையும் போர்க்குற்றத்தையும் சர்வதேசத்துடன் பேசி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் தமிழர் தலைமைகளை தேர்ந்தெடுப்போம் என்ற பதாதைகையும், ஐரோப்பிய, அமெரிக்க கொடிகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியறியும் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தின் போது சங்கத்தின் தலைவி கா.ஜெயவனிதா தெரிவிக்கையில் நாம் ஆர்ப்பாட்டம் தொடங்கி முதல் வருடம் சம்மந்தர் தெரிவித்தார் அடுத்த வருடம் உங்களது பிள்ளைகளுடன் வீடுகளிற்கு சென்று சந்தோசமாக இருப்பீர்கள் என சொன்னார். ஆனால் அடுத்த வருடமும் எங்களிற்கு தீர்வும் கிடைக்கவில்லை. தற்போது மூன்றாவது வருடமாகவும் தாய்மார்கள் தெருவிலேயெ இருக்கின்றனர். என தெரிவித்தார்.