திருப்பூரில், காணாமல்போன கிணற்றை கண்டுபிடித்துத் தரக்கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்த நூதன சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தின் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீலகண்டபுரம் பகுதியில் சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், அன்றாடப் பயன்பாட்டுக்காக அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு, அந்த கிணற்றில் தண்ணீர் வற்றிப்போன காரணத்தால் பொதுமக்கள் யாரும் அந்த கிணற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்தக் கிணற்றின் அருகே வசிக்கும் ஒரு நபர், அந்தக் கிணற்றை முழுவதுமாக மண்ணைப் போட்டு மூடிவிட்டு, அதில் வீடுகட்டும் பணியை தொடங்கியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், அந்த நபரிடம் சென்று ‘பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கிணற்றை எப்படி மூடிவிட்டு அதில் வீடு கட்டலாம்..?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், பொதுமக்கள் தன்னை மிரட்டுவதாகக் கூறி அவரது தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ’பயன்பாட்டில் இருந்த கிணற்றை காவல் துறையினர் கண்டு பிடித்து தரவேண்டும்’ என்று திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், ‘உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுங்கள்; தீர்வு காண்கிறோம்’ எனக் கூறினர். அவர்களும் தங்கள் கோரிக்கையை மனுவாக கொடுத்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கிணற்றைக் கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால், திருப்பூர் வடக்குக் காவல் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

(தமிழக செய்தியாளர் ப.ஞானமுத்து)