பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்காவில் அரசநிர்வாக இயந்திரம் செயலிழந்துள்ளது. இயல்புவாழ்க்கை சீர்குலைந்துள்ளதைப் போன்ற உணர்வினால் சாமானிய மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதநிலையில் ரணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரியுள்ளார். இதனால் த.தே.கூட்டமைப்பிற்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் (மாவை.சேனாதிராசா உள்ளடங்கலாக) ரணிலின் அரசாங்கத்திற்கு ஆதரவான சத்தியக் கடதாசிகளில் ஒப்பமிடுவதற்கு உடன்பட மறுத்துள்ளனர். இதனால் கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாடுகள் வலுவடைந்துள்ளன.


ஸ்ரீலங்காவின் தற்போதய அரசியல் களநிலையில் ரணிலுக்கு ஆதரவளித்து மகிந்தாவை எதிர்ப்பதா? அல்லது மகிந்தாவை ஆதரிப்பதா? என்று மட்டுமே கூட்டமைப்பு ஆலோசிக்கின்றது. ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக ஆராயத் தவறுகின்றனர். தற்சார்பான முனைப்புக்களுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்குக் கொடுக்க மறுக்கின்றனர்.

நாடு சுகந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த எந்தவொரு சிங்களப் பேரினவாதக் கட்சியும் தமிழர் நலன்களில் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. மாறாக தமிழரை இரண்டாம்தரக் குடிகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனர் அழித்துள்ளனர்.


அழித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்குள் ரணிலும் விதிவிலக்கானவர் என்று சொல்லமுடியாது. தமிழ்த் தேசிய விடுதலைப் போரில் ஆயுதப் போராட்டத்தை கபடத்தனமான சூழ்ச்சிகளால் உருக்குலைத்த பெருமை ரணிலுக்குரியது. இதேபோல் போரில் கொத்துக் கொத்தாக தமிழ்மக்களைப் படுகொலைசெய்த பெருமை மகிந்தவுக்குரியது. இதில் இருவருமே தமிழின விரோதிகள் என்பது தெளிவானது.

இவ்விடத்தில் கூட்டமைப்பினர் ரணிலுக்கோ அல்லது மகிந்தவுக்கோ ஆதரவளிக்கின்ற பொழுது தமிழ்மக்களின் நலன்கள் சார்ந்து மட்டுமே சிந்திக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்.
த.தே.கூட்டமைப்பினர் தமிழ்மக்கள் சார்பான நிலைப்பாட்டில் இதய சுத்தியுடன் இருப்பவர்களாயின் நிபந்தனைகளுக்கு மகிந்தவை ஒப்பமிடுமாறு கேட்டுக்கொண்டதைப் போன்று ரணிலிடமும் கேட்க வேண்டும். எழுத்தில் உடன்படிக்கைகள் இருக்க வேண்டும். அதை மக்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும். ஆனால் கூட்டமைப்பு இதைச்செய்யத் தயங்குகின்றது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ரணிலின் நயவஞ்சகமான செயற்பாடுகளும் மன்னிக்க முடியாதவை. ரணிலும் தமிழினத் துரோகிதான்.

இதற்கு அடையாளமாக கூட்டமைப்பை ஜனநாயகத்திற்கு விரோதமாக கபடத்தனமாக உள்ளீர்க்கின்ற ரணில், தமிழ்மக்களின் நலன்களில் அக்கறைகொள்ள மறுக்கின்றார். ரணிலின் ஆட்சியிலும் தமிழ் மக்கள் நிம்மதியின்றியே வாழுகின்றனர். தமிழ் மக்களின் இருப்பை நீண்டகாலப் போக்கில் பாதிக்கவல்ல இரகசியத் திட்டங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி செய்யத்தயங்கவில்லை.

இந்நிலையில் தமிழினப் படுகொலையை செய்வித்த மகிந்தவை நிரகரிப்பதாக நினைத்துக்கொண்டு அரசியல் சாணக்கியம் அற்றவகையில் ரணிலை ஆதரிப்பது குளிர் தாங்க முடியாதவன் கரடியைக் கட்டிப்பிடிப்பதற்கு ஒப்பானதாக அமையலாம்!.

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் பல தமிழ்த் தலைவர்கள் அரசியல் சாணக்கியமின்மையால் வரலாற்றுத் தவறுகளைச் செய்துள்ளனர். அதற்கு த.தே.கூட்டமைப்பின் தற்போதய தலைமைகளும் விலக்கானவர்களாகத் தெரியவில்லை.

‘இராவணன்’

0 Shares