பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகள் சுமார் 30 பேர், பாக்கெட் ரேடியோ போன்ற கருவி ஒன்றை கழுத்தில் தொங்கவிட்டபடி புதுச்சேரியில் வலம் வந்ததை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

சுற்றுலாத் தலமான புதுச்சேரிக்கு நாள்தோறும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கைடு எனப்படும் வழிகாட்டி ஒருவர் உதவியுடன் புதுச்சேரியின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்ப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று (15ம் தேதி), புதுச்சேரி கடற்கரையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுமார் 30 பேர் பாக்கெட் ரேடியோ போன்ற கருவி ஒன்றை கழுத்தில் தொங்கவிட்டபடி சுற்றி வந்தனர். அந்த கருவியில் இருந்து, புதுச்சேரியை பற்றிய விளக்கம் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்த கருவியை, மற்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இந்த கருவி குறித்து பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகளுடன் வழிகாட்டியாக வந்திருந்த ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் கூறியதாவது; “நான்கு அல்லது ஐந்து பேர் சுற்றுலா வந்திருந்தால் வழிகாட்டும் நபர் அவர்களை எளிதாக ஒருங்கிணைத்து, சுற்றுலாத் தலங்களின் பெருமைகளைப் பற்றி தெளிவாக விளக்க முடியும்.

ஆனால் 10க்கும் மேற்பட்டவர்கள் வரும்போது, அவர்களை ஒருங்கிணைத்துச் சென்று, இடத்தின் சிறப்புகளை சத்தமாகச் சொல்லி விளக்குவது சிரமம். அதற்காக பயன்படுத்துவதுதான் ‘ஹியரிங் டிவைஸ்’ எனப்படும், பிறர் பேசுவதை கேட்கும் கருவி. இதன் மூலம், 50 சதுரமீட்டர் சுற்றளவில் உள்ள சுற்றுலாப் பயணிகளை தொடர்புகொள்ள முடியும். கூட்ட நெரிசல் மிகுந்த சுற்றுலாத் தலங்களில் இதை பயன்படுத்துவதால், சுற்றுலாப் பயணிகள் வழிதவறி செல்வதை தடுக்க முடியும்.

அதுமட்டுமின்றி, ஒரு இடத்தின் சிறப்பு குறித்து நாம் சொல்வதை, அவர்கள் வசம் உள்ள கருவியின் மூலம் தெளிவாக கேட்டுக்கொள்ளலாம். வெளிநாடுகளில் இதுபோன்ற கருவிகள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பயணிகள், இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களை காண வந்துள்ளனர். அடுத்ததாக இவர்கள், சென்னை மற்றும் கோவாவுக்கு செல்ல உள்ளனர்” என, அவர் தெரிவித்தார்.

(தமிழக செய்தியாளர் ப.ஞானமுத்து)