‘கட்சியின் முடிவை மீறி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த கோடீஸ்வரன் மீது கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை பாயும்’

இப்படி, ரெலோவின் பொதுச்செயலாளர் சீற்றத்துடன் அறிக்கை விட்டு பல வாரங்களாகி விட்டது. வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் கோடீஸ்வரன் ஆதரித்து வாக்களித்தபோதே, செயலாளர் இப்படி அறிக்கை விட்டார்.

ஆனால் அந்த அறிக்கையின் பின்னர், இரண்டு அமைச்சுக்கள் மீதான குழுநிலை வாக்கெடுப்பில் கோடீஸ்வரனும், செல்வம் அடைக்கலநாதனும் ஆதரித்து வாக்களித்தனர். இறுதி வாக்கெடுப்பில் கோடீஸ்வரன் ஆதரித்து வாக்களித்தார்.

எனினும், கோடீஸ்வரன் மீது ரெலோ நடவடிக்கை எடுக்க முடியாத நெருக்கடியில் உள்ளது.

காரணம்- தன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால், தமிழரசுக்கட்சிக்கு செல்வேன் என கோடீஸ்வரன் கட்சி தலைமைக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடமாகாணசபை இயங்கியபோது, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கட்சியை கலந்துரையாடாமல் கையொப்பமிட்டதற்கு, பா.டெனீஸ்வரனை மூன்று வருடங்களிற்கு கட்சியை விட்டு ரெலோ இடைநிறுத்தியது.

எனினும், கட்சியின் தீர்மானத்தை மீறி கோடீஸ்வரன் வாக்களித்தும், ரெலோ ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லையென ரெலோவிற்குள் கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை, அம்பாறையில் ரெலோ அமைப்பினரை உதாசீனம் செய்தே, கம்பெரலிய அபிவிருத்தி திட்டங்களில் கோடீஸ்வரன் ஈடுபட்டு வருவதாக கட்சி தலைமைக்கு முறைப்பாடு வைக்கப்பட்டுள்ளது.

ஆலையடி வேம்பு, நாவிதன்வெளி, கல்முனை நகரசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் ரெலோ பிரதிநிதிகள் அங்கம் வகிக்கிறார்கள்.

இதில் நாவிதன்வெளி தவிசாளர், ரெலோவின் பிரதிநிதி. எனினும், கம்பெரலிய அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளில் ரெலோ உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளின் கருத்தை கோடீஸ்வரன் கணக்கில் எடுப்பதில்லை.

மாறாக, பிரதேசத்தில் உள்ள தமிழரசுக்கட்சி உறுப்பினர்களின் சிபாரிசுகளிற்கே, நிதி ஒதுக்கப்படுவதாக முறைப்பாடு எழுந்துள்ளது.

தேர்தலை கருத்தில் கொண்டு, பிரதேசத்தில் உள்ள தமிழரசுக்கட்சி பிரமுகர்களுடன் இரகசிய உடன்பாட்டை கோடீஸ்வரன் ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

குறிப்பாக, தமிழரசு்கட்சி பிரமுகர் கலையரனை மாகாணசபை தேர்தலில் வெற்றியடைய வைக்க கோடீஸ்வரனும், கோடீஸ்வரனை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைய வைக்க கலையரசனும் ஒத்துழைத்து செயற்பட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அம்பாறையில் ரெலோவின் வேட்பாளராக களமிறக்கப்பட்டு, வெற்றிபெற்ற பின்னர், தம்மையும், கட்சியையும் கோடீஸ்வரன் உதாசீனம் செய்கிறார் என்ற அதிருப்தி ரெலோவிற்குள் அதிகரித்துள்ளது.