சூர்யாவின் என்.ஜி.கே., விக்ரமின் கடாரம் கொண்டான், கார்த்தியின் கைதி, விஷாலின் அயோக்கியா ஆகிய படங்களை கோடையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

கடந்த வருடம் வெளியான ஸ்கெட்ச், சாமி-2 படங்களுக்கு பிறகு கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

இது அவருக்கு 56-வது படம். ராஜேஷ் எம்.செல்வா டைரக்டு செய்கிறார். அக்‌ஷரா ஹாசன் கதாநாயகியாக வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. டிரெய்லரும், விக்ரமின் தோற்றமும் பொங்கல் பண்டிகையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதிரடி திகில் படமாக எடுத்துள்ளனர். ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

விஷாலின் அயோக்கியா படத்தையும் ஏப்ரல் மாதம் வெளியிடுகின்றனர். இதில் ராஷிகன்னா நாயகியாக வருகிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெங்கட் மோகன் இயக்கி உள்ளார்.

சூர்யாவின் என்.ஜி.கே. படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வருகின்றனர். இந்த படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பே இதன் வேலைகளை துவக்கி பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது. தற்போது இறுதி கட்டவேலைகள் நடக்கின்றன. இதில் சாய் பல்லவி, ரகுல்பிரீத் சிங் நாயகிகளாக நடித்துள்ளனர்.

கார்த்தியின் கைதி படம் ஜூன் மாதம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். கதாநாயகி இல்லாத படம். கார்த்தி கைதி வேடத்தில் வருகிறார். ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை கொண்ட திகில் படமாக தயாராகி உள்ளது.

இதைத்தவிர ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படமும் கோடை வெளியீடாக மே மாதம் திரைக்கு வருகிறது.