இலங்கை

சஜித்திற்கு எதிராக மொட்டுக்கட்சி மஹிந்தவிடம் முறைப்பாடு!

தேர்தலுக்கான பிரசாரக் காலம் முடிந்த பின்னரும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த பிக்கு ஒருவரது போராட்டத்தை நிறுத்துவதற்கு புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ செயற்பட்டபோது நேரலையாக அந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு முறையிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர்களில் ஒருவரான டலஸ் அழகப்பெருமவினால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரியவுக்கு இந்த முறைப்பாடு இன்றைய தினம் எழுத்துமூலம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் ஸ்ரீலங்காக் குடியுரிமை ஆவணங்களை சமர்பித்து நிரூபித்துக்காட்டுமாறு கோரி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கடந்த 10ஆம் திகதி முதல் கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் இந்த உணவுதவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமை நீக்கம் மற்றும் ஸ்ரீலங்கா குடியுரிமை பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பிலான உண்மையான ஆவணங்களை 03 தினங்களிற்குள் வெளியிடும்படி வலியுறுத்தி கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பித்தார்.

இந்த நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நேற்று நள்ளிரவில் சுதந்திர சதுக்கத்திற்கு விஜயம் செய்தார்.

குறித்த பிக்குவுடன் சந்திப்பை நடத்திய அவர், பின்னர் போராட்டத்தைக் கைவிடும்படி கோரிக்கை முன்வைத்தை தொடர்ந்து, போராட்டத்தை அவர் கைவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, குறித்த இடத்திற்கு நள்ளிரவு 12.30 அளவில் சென்று போராட்டத்தைக் கைவிடும்படி கோரிக்கை முன்வைத்திருந்ததாகவும், அந்த சம்பவத்தை சஜித் பிரேமதாஸவின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டி பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெருமவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை ஜனாதிபதி தேர்தலில் ஊடக ஒழுக்கக்கோவை மற்றும் ஜனாதிபதியை தெரிவுசெய்யும் சட்டத்தின் பிரிவுகளை மீறுகின்ற செயற்பாடாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தரப்பினரின் ஊடகங்களை மீறுகின்ற மற்றும் சட்டங்களை மீறிச்செயற்படுகின்ற விவகாரங்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

வாரியபொல சிறைச்சாலையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பதற்றம் !

மயூனு

கலைப் பிரிவில் தேசியரீதியில் 2ஆம் இடத்தையும் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் அடித்து தூக்கிய யாழ் மாணவன் !

மயூனு

16ஆம் திகதி ஜனநாயகக் கடமையை அனைவரும் சரிவர நிறைவேற்றுங்கள் !

admin

Leave a Comment