முதுகெலும்பில்லாத ஒரு தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவம் இருப்பதாலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று சின்னாபின்னமாகியிருக்கிறது என்று சுதந்திரக்கட்சி உறுப்பினரான குமார வெல்கம எம்.பி. தெரிவித்தார்.

வெளிநாட்டில் தங்கியிருக்கும் சந்திரிகா குமாரதுங்க நாடு திரும்பியதும் அடகு வைக்கப்பட்டுள்ள கட்சியை மீட்டெடுப்போம் என்றும் அவர் கூறினார்.

தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் யோ. தர்மராஜுக்கு வழங்கிய நேர்காணலின்போதே குமார வெல்கம மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நேர்காணல் வருமாறு,

கேள்வி: இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சக்திமிக்கதொரு கட்சியாக உள்ளபோதும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஒருவரை களமிறக்க முடியாத நிலைமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: கட்சிக்கு என்ன நடந்துள்ளதென்பதை கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிடமே கேட்க வேண்டும். ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுக்கு அடகு வைத்துள்ளனர்.

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுக்கு அடகு வைத்துள்ளதை கட்சியின் தீவிர பற்றாளன் என்ற வகையில் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கட்சியை அடகு வைத்துள்ளதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். அதற்கு நான் ஆதரவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் செய்துள்ள விடயமானது பெரும் பிழையானது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யவுமில்லை. நான் போட்டியிடுவதாக கூறிய போதிலும் எனக்கும் ஆதரவு வழங்கவில்லை. மாறாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடகு வைத்துள்ளனர். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது கட்சியை காட்டிக்கொடுக்கும் விடயமாகும்.

கேள்வி: நீங்கள் இவ்வாறு கூறினாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துவிட்டதே. இனி என்ன செய்யப் போகின்றீர்கள்?

பதில்: கட்சியை காட்டிக்கொடுத்து அடகு வைத்துள்ளதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடகு வைத்ததிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்துக் கொண்டு கட்சியைப் பலப்படுத்த முடியுமாயின் அதற்கு நான் தலைமை தாங்குவேன்.

கேள்வி: ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்ஷவிடம் சென்ற நீங்கள் அங்கு நடந்த தவறான முடிவுகளை பார்த்து கொதித்தெழுந்து மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தீர்கள். இன்று இங்கும் அதேபோன்றதொரு நிலைமை தான். இவ்வாறிருக்க இந்த செயற்பாடு குறித்து உங்களின் நிலைப்பாடு?

பதில்: 30 வருடங்களுக்கு மேலாக நான் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டுச் செல்ல முடியாதென்பதே என்னுடைய நிலைப்பாடாகும்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் அடகு வைத்ததையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனால், கட்சியின் செயற்பாட்டு உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு எப்படியாவது மொட்டிடம் அடகு வைக்கப்பட்டதிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டுக்கொண்டு கட்சியை மீள ஆரம்பிப்பதே என்னுடைய நோக்கமாகும்.

கேள்வி: கட்சியை மீள ஆரம்பிப்பதெனக் கூறுவதாயின், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நீங்களும் இணைந்து கட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றீர்களா?

பதில்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் லண்டனில் இருப்பதனால் அவரை இதுவரை நான் சந்தித்து கலந்துரையாடவில்லை.

மாறாக அவர் நாட்டுக்கு வந்தவுடன் அவருடன் கலந்துரையாடி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் அடகு வைக்ப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவ்வாறு மீட்பதென்பது குறித்து முக்கிய முடிவை எடுப்போம்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுவாரென கட்சியின் செயலாளர் கூறினார்.

இறுதியில் அவ்வாறானதொரு சம்பவம் நடக்கவில்லை. இவ்வாறாயின் நான் போட்டியிட மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உங்களிடம் கூறினாரா?

பதில்: இல்லை. எவ்வாறும் என்னிடம் இது பற்றிப் பேசமாட்டார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து 2015 ஆம் ஆண்டு என்னை வெளியேற்றி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குமாறு கூறினர்.

எனவே, நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் மட்டுமே. அதனால், முக்கிய விடயங்களில் என்னை புறக்கணித்தே முடிவெடுத்தனர். அதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாரும் போட்டியிடாதமைக்கு தற்போதுள்ள மத்திய செயற்குழுவே பொறுப்பாகும்.

கேள்வி: கட்சியின் முடிவையும்தாண்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நீங்கள் கட்டுப்பணம் செலுத்திய போதிலும், வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யாது போட்டியிலிருந்து விலக யாரேனும் அழுத்தம் கொடுத்தனரா?

பதில்: இல்லை. எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. மாறாக எனக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவில்லை. குறைந்த பட்சம் அவர்களால் போட்டியிட முடியாவிட்டாலும், எனக்கு ஆதரவு வழங்கியிருக்க முடியும்.

ஆனால், கட்சியினர் எனக்கு ஆதரவு வழங்கவில்லை. அதனால், ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட வேண்டிய தேவையில்லையென முடிவெடுத்தே விலகினேன்.

கேள்வி: அவ்வாறாயின் கட்டுப்பணம் செலுத்தும் முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அறிவிக்கவில்லையா?

பதில்: ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாரும் போட்டியிட இல்லையெனில் நான் போட்டியிடுவதாக கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதமொன்றை கையளித்தேன்.

இந்த கடிதத்தை கையளிப்பதற்காக ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குங்கள்.

அவர் யாராயினும் நான் முழு ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியதுடன், அவ்வாறு போட்டியிடுவதற்கு யாரும் இல்லையெனில் நான் போட்டியிடுகின்றேன் எனவும் குறிப்பிட்டேன்.

கேள்வி: அவ்வாறாயின் அதற்கு அவர் எவ்வித பதிலையும் வழங்கவில்லையா?

பதில்: இல்லை. நான் போட்டியிடுவதாகக் கூறிய போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எனக்கு ஆதரவு வழங்க முன்வர வில்லை. அதனாலேயே நான் போட்டியிலிருந்து விலகினேன்.

கேள்வி: கட்சியின் ஆதரவு கிடைக்காதென்ற போதிலும் நீங்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியதாயின், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஜனாதிபதித் தேர்தலில் உங்களை போட்டியிடுமாறு எதுவும் கூறினாரா?

பதில்: இல்லை. அவர் அவ்வாறு எதுவும் கூறவில்லை. மாறாக நிகழ்வொன்றில் அவரை சந்தித்தபோது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பாதுகாக்க வேண்டுமாயின் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் சார்பில் ஒருவரை களமிறக்க வேண்டுமென்று மட்டுமே என்னிடம் கூறினார்.

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள போதிலும், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் நடுநிலை வகிப்பதாகக் கூறியுள்ளார். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: முதுகெலும்பில்லாத தலைவர் என்று மட்டுமே கூறமுடியும்.

கேள்வி: முதுகெலும்பில்லாத தலைவர் எனக் கூறினாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் அவரிடம் தானே இருக்கின்றது?

பதில்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் அவரிடம் தான் இருக்கின்றது. அதனால், அவரை நீக்க முடியாது.

இருப்பினும் தீர்க்கமானதொரு முடிவை எடுக்க முடியாததற்காகவே முதுகெலும்பில்லாத தலைவர் என்றே கூறுகின்றேன். அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டுச் செல்லமாட்டோம்.

கேள்வி: அவ்வாறாயின் கட்சியின் தலைமைத்துவத்தை அவர் யாருக்கும் கொடுக்கவுள்ளாரா?

பதில்: அதனை இப்போது கூற முடியாது. ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் அது தொடர்பான முடிவை எடுப்போம்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாடு திரும்பியதும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளீர்களா?

பதில்: ஆம். அவர் நாடு திரும்பியதும் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளோம். இருப்பினும், அந்த சந்திப்பு யாருக்கும் ஆதரவு வழங்குவதற்கானதாக இருக்காது. மாறாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் அடகு வைத்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவ்வாறு மீட்பது, கட்சியை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளோம்.

கேள்வி: நீங்கள் உள்ளிட்ட பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகக் கூறப்படுகின்றதே?

பதில்: அது போலியான தகவலாகும். நான் ஒருபோதும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதியல்ல.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள்?
பதில்: நான் எதிர்க்கும் யாருக்கும் வாக்களிக்கமாட்டேன். இருப்பினும் எனக்கு சரியென தோன்றும் நபருக்கு வாக்களிப்பேன்.

51 Shares