சுவிட்ஸர்லாந்து தூதரகப் பணியாளர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரத்தில் அரசாங்கமும், சுவிஸ் தூதரகமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வுக்கு வரவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் சட்டங்கள் இருப்பதாகவும், நாட்டின் இறைமையை மீறிச்செயற்பட தூதரகங்களுக்கும் தனிநபர்களுக்கும் இடமளிக்கமுடியாது எனவும் அவல் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்குவந்து ஒரே வாரத்தில் கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு சில மணிநேர விசாரணையின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய பிரதமரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முக்கியமான படுகொலைகள், வெள்ளை வான் கடத்தல் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை நெறிப்படுத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா உயிரச்சுறுத்தல் காரணமாக சுவிட்ஸர்லாந்து நாட்டிற்குச் தப்பிச்சென்ற பின்னணியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

எனினும் இந்த கடத்தல் சம்பவம் குறித்து எந்தவித முறைப்பாடும் இதுவரை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை தற்போதைய அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சரான பந்துல குணவர்தன கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அதுதபோல, இந்த சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு சுவிட்ஸர்லாந்து தூதரகம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கத்தவறுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பாரதூரக் குற்றச்சாட்டை கடந்த வெள்ளிக்கிழமை முன்வைத்திருந்தார்.

இருந்தபோதிலும் இந்தக் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்து அறிக்கை வெளியிட்ட கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகம், பாதிக்கப்பட்ட பெண் பணியாளரின் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதால் அவரால் உடனடியாக விசாரணைகளுக்கு முன்னிலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் விசாரணைகளுக்கு தூதரகம் ஒத்துழைக்கவில்லை என்பது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் கண்டியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம, சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம் மோதலுக்கு இட்டுச்செல்வதற்கு முன்னரே விரைவில் பேச்சுவார்;ததை மூலம் தீர்வுகண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.