கிரிக்கெட்டிலிருந்து சிறிதுகாலம் ஓய்வெடுத்து, இராணுவ சேவையில் ஈடுபட்டு வரும் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் டோனிக்கு மற்றொரு கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் டோனி இராணுவ சேவையில் மிகுந்த ஈடுபாடு காட்டியமையால் 2011ஆம் ஆண்டு அவருக்கு இராணுவம் சார்பாகக் கௌரவம் அளிக்கப்பட்டு சிறிது நாட்களுக்கு அவர் இராணுவ சேவையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் ஆக்ராவில் பரசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சியை மேற்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றார்.

சுமார் 8 ஆண்டுகள் இடை வெளிக்குப்பிறகு தற்போது அவர் இந்தியக் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாமல் ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் இராணுவ சேவை செய்ய விருப்பம் தெரிவித்தார். அதன் பேரில் டோனி கடந்த 3ஆம் திகதி இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டார்.  எதிர்வரும் 15ஆம் திகதி வரை இராணுவ சேவையை மேற்கொள்ளவுள்ள அவருக்கு, இந்திய சுதந்திர தினத் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

காஷ்மீரில் இருந்து லடாக் பிராந்தியம் தனிப் பிரதேசமாக உருவாக்கப்பட்டு இருப்பதால், அந்தப் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அங்கு முதன் முதலாக டோனி மூலம் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளனர். லடாக்கில் 15ஆம் திகதி டோனி தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்த இராணுவ அதிகாரிகள், லடாக்கில் எந்தப் பிரதேசத்தில் கொடி ஏற்றுவார் என்பதைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

16 Shares