தமிழ்த் தேசிய விடுதலை வரலாற்றில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கின்ற தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள், இவ்வருடமும் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளமை உலகெங்கிலும் பரந்து வாழுகின்ற தமிழ்மக்கள் மத்தியில் உளப்பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுயிரை எமது தேசவிடுதலைக்காக ஈகம்செய்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி அவர்கள் அனைவரையும் தங்களுடைய பிள்ளைகளாக, சகோதரர்களாக, சகோதரிகளாக மனதில் நிறுத்தி ஆண்டவனுக்கு இணையான இடத்தில் வைத்தது பூசிக்கின்ற இப்புனித நாளில் இன்று சிலர் வியாபாரம் செய்கின்றமை வேதனையளிக்கின்றது.

இந்த உத்தம புருஷர்களின் தியாகநிகழ்வு இன்று சாக்கடை அரசியல்வாதிகளால் மாசுபடுத்தப்படுகின்ற மிக வேதனையான பதிவுகள். எமது இனத்திற்குச் சாபக்கேடாக அமைந்துள்ளமை மறுப்பதற்கில்லை.
குறிப்பாக முள்ளிவாக்காலுக்குப் பின்னர் தாயகத்திலும் புலத்திலும் அரசியல் செய்துவருகின்ற தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ள வழிப்போக்கர்கள், தங்களுடைய கொள்கைப் பிரகடனங்களைச் செய்வதற்கான களமாக இந்த மாவீர்ர்நாளை இம்முறை பயன்படுத்தியுள்ளனரோ என்ற ஏக்கம் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

புலம்பெயர் தேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் நெறிப்படுத்தப்பட்ட பல தமிழ் அமைப்புக்கள் இன்றும் அதே நாமத்தில் இயங்கிவருகின்றன. ஆனால் அவை அனைத்துமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகளில் இருந்து விலகி, தற்சார்ப்புப் பொருளாதார நோக்கங்களுடன் செயற்படுகின்றமை வெளிப்படையானது. இதற்காக அவர்கள் புலிகளின் சின்னங்களை அபகரித்துள்ளதுடன் மக்களையும் ஏமாற்றுகின்றனர்.

இவர்கள் புலத்தில் புலிகள் அமைப்பின் ஆளுகையில் இருந்த சகல சொத்துக்களையும் திருடியுள்ளனர். சிலருக்கு உயிராபத்துக்களை ஏற்படுத்தி அச்சமூட்டிக் கொள்ளையடித்துள்ளனர்.

ஆனால் எமக்காகப் போராடி விழுப்புண் அடைந்தவர்கள் இன்றும் உதவிகளின்றி அவலப்படுகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்களையும் குழந்தைகளையும் திரும்பிப் பார்ப்பதற்கே இந்த அமைப்புகளில் இருக்கின்றவர்கள் அருவெறுப்பு அடைகின்றனர். எமது மக்களின் அவலம், இயலாமை, வறுமை என்பன புலத்தில் இன்று முக்கியமான நிதியீட்டல் கருவிகளாக மாற்றமடைந்துள்ளன.

இவ்வாறான நிலையில் இவ்வருடம் சில இணையத்தளங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உத்தியோக பூர்வமான மாவீரர் தின அறிக்கை என்று கூறப்படுகின்ற அறிக்கை ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகம் (தலைவர் செயலகம்) வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் புலத்தில் தற்பொழுதும் தங்களைப் புலிகளாகக் காண்பித்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துக்களுக்கு அதிபதியானவர்களின் தற்சார்பு அரசியல் கொள்கைகளும் தாயக அரசியலில் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதித்துவத்தைச் சிதைக்கவல்ல கருத்துக்களும் பிரசுரமாகியுள்ளது.

குறிப்பாக இவ்வறிக்கை, தாயகத்தில் அரசியல் ஏதிலியாக யாசித்துக்கொண்டிருக்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் அரசியல் எதிரியாகப் பார்க்கப்படுகின்ற, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிந்திப்பதாகவும் வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலை நோக்கியதாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளின் மீளுருவாக்கத்தைத் தடுக்க வல்லதாகவும் திட்டமிட்டு உள்நோக்குடன் எழுதப்பட்டுள்ளது.

இதில் புலம்பெயர் தேசங்களில் போருக்கு முன்னர் இருந்த கட்டமைப்புக்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்று அறிக்கையாளர்கள் கேட்டுள்ளார். இதனூடாக இவ்வறிக்கையை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் எவருமே எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பது வெளிப்படையாகின்றது.

அதாவது தற்பொழுது ஐரோப்பாவில் இயங்குகின்ற அனைத்துலகக் கட்டமைப்பின் உறுப்பினர்கள் (இவர்கள் அனைவருமே முறையாக ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளாத சாமானியர்கள்) இந்த அறிக்கையை எழுதியிருக்க வேண்டும். ஏனெனில் இந்த அறிக்கையில் சுவிஸ் நாட்டிற்கும் ஐரோப்பிய நீதிமன்றிற்கும் துதிபாடப்பட்டுள்ளது.

எமது அமைப்பின் இறுதிக்கட்ட சமாதான முயற்சிகளை முறியடிக்கும் நோக்குடன் ஐரோப்பிய நாடுகள் எங்களுடைய போராளிகளுக்கு போக்குவரத்ததுத் தடையை அழுல்படுத்தி, சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி, எமது இனத்தைச் சிங்களத்துடன் இணைந்து அழித்தமையை இந்த அறிக்கையாளர்கள் மறைத்துள்ளனர்.

இந்த அறிக்கையை வடிவமைத்துள்ள நபர்கள் அனைத்துலகக் கட்டமைப்பு என்கின்ற ஒரு அவையை அதாவது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களைப் பாதுகாக்க முற்பட்டுள்ளனர். இத்தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் பிரதிநிதியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாயகத்தில் புலிகள் அமைப்பின் பணத்தில் அரசியல் செய்கின்றார் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது. இவருடைய அரசியல் நகர்வுகளுக்கு குறித்த அமைப்பினர் பணத்தை அள்ளி அள்ளி இறைக்கின்றனர். ஆனால் புலிகள் அமைப்பின் போராளிகளில் சுமார் நூறிற்கும் அதிகமானவர்கள் தமிழ் அரசியல் கைதிகளாக இன்றும் சிறைகளில் வாடுகின்றனர். போராளிகளை விடுவிப்பதற்குக்கே பணம் கொடுக்காத குறித்த ஆசாமிகள் கஜேந்திரகுமாரின் அரசியலுக்காக பணத்தை வாரி இறைக்கின்றமை புரியாத புதிராகவே உள்ளது.

இந்நிலையில் இம்முறை மாவீரர் தின அறிக்கையில் கூட்டமைப்பின் நாமம் சுட்டிக்காட்டப்பட்டு வஞ்சிக்கப்பட்டுள்ளது. இதை அறிக்கையாளர்களின் அறிவின்மையின் வெளிப்பாடாகப் பார்க்கமுடியாது. மாறாக இதை தாயக அரசியலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஊடாகக் கால் பதிப்பதற்கான இராஜதந்திரமாகவே பார்க்க வேண்டும்.

புலிகள் அமைப்பிற்கு அரசியல் தெரியாதெனப் பலர் பலவாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அந்த அமைப்பின் அரசியல் நகர்வுதான் அதன் அழிவிற்கும் காரணமாக அமைந்துள்ளதாக விமர்சிக்கின்ற நிலையிலும் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தாயகமக்கள் புலிகள் அமைப்பின் எச்சமாகவே பார்க்கின்றனர்.

இதனால் தமிழ் மக்கள் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தையும் பொருட்படுத்தாது,ஒன்றிணைந்து வாக்களித்து தங்களுடைய ஏகப்பிரதிநிதிகளின் ஊடாக சிங்களத்தின் அரசியலையே மாற்றுகின்றனர். இதுதான் தற்பொழுது தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வரலாற்றுக் கடமை என்ற அடிப்படை உண்மையைக்கூட இந்த அறிக்கையாளர்கள் மாற்ற முற்பட்டுள்ளனர்.

இந்த இரு விடயங்கள் மட்டுமன்றி மாவீரர் தின அறிக்கையில் சொல்லக்கூடாத, சொல்லமுடியாத பல விடயங்களிலும் அறிகையாளர்கள் கைவைக்கத் தவறவில்லை.

இறுதிவரை களமுனைகளில் முழுநேரமாகக் கடமைசெய்து புலம்பெயர் தேசங்களில் அரசியல் தஞ்சமடைந்துள்ள போராளிகள் அனைவரையும் இந்த அமைப்பினர் தங்களுக்குச் சவாலானவர்களாகப் பார்ப்பதுடன், இப்போராளிகளை சிங்கள இராணுவப் புலனாய்வாளர்களுடன் தொடர்புடையவர்களாகவும் காண்பித்து முத்திரைகுத்தி ஒதுக்கவும் முற்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீளுருவாக்கத்தை அதாவது எமது இனத்தின் மறுமலர்ச்சியை விரும்பாத இவர்கள், 2009இற்கு முன்பு புலத்தில் இயங்கிய கட்டமைப்புகளுக்கான ஆதரவை மட்டுமே மக்களிடம் கோரியுள்ளனர். இதன் ஊடாக இவர்கள் போராளிகளையும் போராளிகளின் முயற்சிகளையும் புறத்தொதுக்க முற்பட்டுள்ளனர்.

ஆக! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் போராடிய எமது மக்களையும் ஏற்றுக்கொள்ளாத இந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரும் அவர்கள் சார்பான அரசியல்வாதி பொன்னம்பலமும் மாவீரர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்தி, மக்களை ஏமாற்றி, போராளிகளுக்கும் மக்களுக்குமான இடைவெளியை உருவாக்கி எமது இனத்தை இருள் நோக்கி நகர்த்த முற்பட்டுள்ளனர்.

‘எல்லோரும் தலைவர்கள் ஆகி விட முடியாது. மக்களை உயிரில் சுமப்பவர்கள் மட்டுமே உண்மையான தலைவர்கள்’ என்ற தமிழீழ தேசியத் தலைவர் அதிமேதகு வே.பிரபாகரன் அவர்களின் திர்க்கதரிசனத்தைக் கூட தற்போதய தலைமைச் செயலக அறிக்கைப் போராளிகள் அறிந்திருக்கவில்லை என்பது மட்டுமே இந்த அறிக்கையின் ஊடாக வெளிப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டியுள்ளது.

‘இராவணன்’

0 Shares