மதுரையில், ‘தினகரன்’ நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ’அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு, ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்கணிப்பு வெளியானது என்றும், மு.க.அழகிரியை பின்னுக்குத்தள்ளி, மக்களிடையே அவரது செல்வாக்கை குறைக்கும் விதத்தில் செயல்பட்டதாகவும் கூறி, மதுரையில் உள்ள ‘தினகரன்’ நாளிதழ் அலுவலகத்தை அழகிரியின் ஆதரவாளர்கள் தீ வைத்து எரித்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ‘தினகரன்’ நாளிதழ்  ஊழியர் முத்துராமலிங்கம், கோபி, வினோத் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில், திமுகவின் முக்கிய பிரமுகர் ‘அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட 17 பேரை மதுரை மாவட்ட சி.பி.ஐ நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று (21ம் தேதி), இந்த வழக்கில் தீர்பளித்த மதுரை மாவட்ட சி.பி.ஐ நீதிமன்றம், ’அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்ததை, மதுரைக்கிளை ரத்து செய்தது. மேலும், குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், ’அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த ‘தினகரன்’ நாளிதழ்  ஊழியர் முத்துராமலிங்கம், கோபி, வினோத் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

(தமிழக செய்தியாளர் ப.ஞானமுத்து)