ஈரோடு மாவட்டம் காங்கேயம் வட்டம், மேலப்பாளையத்தில் இரத்தினசாமி, பெரியாத்தா தம்பதியினருக்கு ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது மகனாக 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் 17.04.1756ஆம் நாள் பிறந்தவர் தீர்த்தகிரி. தன்னுடைய இளம் வயதில் போர் பயிற்சி, வில்வித்தை, மல்யுத்தம், வாள் பயிற்சி, சிலம்பப்பயிற்சி என அனைத்திலும் நன்கு தேர்சிபெற்று மாபெரும் மள்ளனாகத் திகழ்ந்தார்.

ஒருநாள் மைசூர் மன்னன் ஹைதர் அலியின்சிப்பந்திகள், தாராபுரம் பகுதிகளில் வரிவசூல் செய்த பணமூட்டைகளை அறச்சலூர், மேலப்பாளையம் வழியாக சங்ககிரி கோட்டைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்தவழியாக குதிரையில் வந்த தீர்த்தகிரி,அவர்களிடம் “யார் நீங்கள்? இது என்ன மூட்டைக்குள்? என்று வினவ, “இது தாராபுரம் பகுதிகளில் வரிவசூல் செய்த பணங்கள். சங்ககிரி கோட்டையில் உள்ள திவான் மீராசாஹிபுக்கு கொண்டு செல்கிறோம்” என்று வந்த சிப்பந்திகள் கூறி நின்றனர்.

உடனே தீர்த்தகிரி அந்த பணமூட்டைகளைப் பிடுங்கிக்கொண்டு, யார் வீட்டுப்பணம் யாருக்கு? எங்கள் நாட்டுப்பணம் எம் மக்கள் தேவைக்குத்தான், அதை உன் திவானிடம் போய் சொல் என்று கூறினார். உடனே மைசூர் சிப்பந்திகள் “ எசமான்.. அந்த திவான் எங்களை கொன்றுவிடுவார். நாங்கள் என்ன பதில் சொல்வது” என கேட்க, “தெற்கே சிவன்மலைக்கும் வடக்கே சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்துக்கொண்டதாகச் சொல்”என்றார். இந்த நிகழ்விற்குப்பிறகு தான், தீர்த்தகிரி “சின்னமலை” என்ற சிறப்புப் பெயரோடு அனைவராலும் அழைக்கப்பட்டார். பிடுங்கிய பணமூட்டைகளை ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கினார். “வெள்ளையனுக்கு மாத்திரமல்ல, வேறு எவனுக்கும் வரி செலுத்த மாட்டோம். எங்கள் வரிப்பணம் எங்கள் பூமியின் நலனுக்காக மாத்திரமே செலவிடப்படவேண்டும்” என்று அன்றைக்கே கம்யூனிசத்தையும், சோஸலிசத்தையும் கையில் எடுத்தவர் மாவீரன் தீரன் சின்னமலை என்றால் மிகையல்ல.

மீண்டும் வரிப்பணம் வசூலிக்கப்பட்டுசங்ககிரிக் கோட்டைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதனை அறிந்த சின்னமலை, அங்கு வந்து அதனைப்பிடுங்கி மீண்டும் ஏழைகளுக்குக் கொடுத்தார். இதனை அறிந்து சங்ககிரி திவான் கடுங்கோபம் கொண்டான். நூறு பேர் கொண்ட குதிரைப்படையை மேலப்பாளையம் அனுப்பிசின்னமலையை கைது செய்து வரும்படி ஆணையிட்டான். சின்னமலை மற்றும் கருப்பசாமி சேர்வை, வேலப்பன் ஆகியோர்இணைந்து திவான் அனுப்பிய குதிரைப்படையை திணறடித்துப் புறமுதுகிட்டு ஓடச்செய்தனர்.
07.012.1782 இல் ஹைதர் அலி மறைவிற்குப்பின்னால், மைசூர் சீரங்கப்பட்டிணத்தில், திப்புசுல்தான், தன் ஆட்சியை செலுத்தத் துவங்கினார். ஆங்கிலேயர்கள் அவருக்கு தொல்லை கொடுத்தார்கள். அந்த நிலையில் சின்னமலையின் வீரத்தையும் தீரத்தையும், கேள்வியுற்று ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்குப் படைபலம் கோரினார். சின்னமலையும் மறுப்பேதும் கூறாமல் தன் கொங்கு நாட்டிலிருந்து 10,000 இளைஞர்களை திரட்டிக்கொண்டு, மைசூர் சென்றார்.

அங்கு சித்தேஸ்வரம், மழவல்லி, சீரங்கப்பட்டிணம் போன்ற இடங்களில் நிகழ்ந்த வெள்ளையர்களுக்கு எதிரான போர்களில் இந்தப்படை வெற்றியை கண்டது. இதற்கு சின்னமலையின் பங்கு தான் மிகச்சிறந்ததாக கருதப்பட்டது. அதுமாத்திமல்ல, வெள்ளையர்களை வெற்றி கொள்வதற்காக ஐரோப்பிய மாவீரன் நெப்போலியனிடம் படைபலம் கேட்டு, திப்புசுல்தான் அனுப்பிய தூது குழுவில், சின்னமலையின் மெய்க்;காப்பாளன் கருப்பசாமிசேர்வை இடம்பெற்றிருந்தார் என்றால், தீர்த்தகிரியின் மீது, திப்புசுல்தான் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார் என்பது புலனாகும்.
அதுமாத்திரமல்ல, சின்னமலையின் படைக்குழுவில் அனைத்து இனத்தவரும் இடம் பெற்றிருந்தனர். வேளாளர்களும், நாயக்கர்களும், வேட்டுவர்களும், பாளையக்காhரர்களும், ஓமலூர் சேமலைப்படையாட்சியும், கருப்பசாமிசேர்வையும், பத்தேமுகமதுஉசேனும், முட்டுக்கட்டை பெருமாத்தேவனும், சென்னிமலைநாடாரும்இடம் பெற்று முக்கிய பொறுப்பில் இயங்கி வந்தனர். இதனால் அவர் ஓட்டுமொத்த சமூக நலத்திற்காக பாடுபட்டாரே தவிர, சாதீயத்திற்கு என்றைக்குமே துணைபோனது இல்லை என்பதும், அன்றைய காலகட்டத்தில் சாதீயம் என்பது தேவைப்படவில்லை என்பதும் புலனாகிறது.

மைசூர் மன்னன் திப்புசுல்தான் மரணமடைந்ததற்குப்பின்னால் சின்னமலையின் படை, நாடு திரும்பியது. அதற்குப்பிறகு, ஓடாநிலையில் கோட்டை அமைத்து, வெள்ளையர்களை எதிர்க்கத் துவங்கினார். சிவன்மலைக்கு அருகில் ஒருநிலத்தை வாங்கி அங்கே படைவீரர்களுக்குப் பயிற்சி அளித்தார். பாளையக்காரர்களை ஒன்று திரட்டி அவர்களிடம் வெள்ளையனை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி, அதற்காகப் பொதுப்படை ஒன்றை திரட்டிக்கொண்டு, கோவை சென்று ஆங்கிலேயரிடம் போர் செய்தார். தானே முன்னின்று படை நடத்தி அனைவருக்கும் ஆனையிட்டு வெற்றிபெற்று “கோவைக்கோன்” என்று அனைவராலும் அழைக்கப்படலானார்.
திப்பு சுல்தான் மறைவிற்குப்பின், கொங்கு மண்டலத்தைத்தவிர, பிற பகுதிகள் ஆங்கிலேயர் வசமாயிற்று. அறச்சலூர் போரில் ஆங்கிலேயப்படைகளை சின்னமலை துரத்தி அடித்தார். அடுத்துகாவிரிநதிக்கரைப் போரில் 1801ல் கர்னல் மாhர்க்ஸ்வெல் படையை துரத்திஅடித்தார். அதே மார்க்ஸ்வெல் தலையை 1802ல் ஓடாநிலைப்போரில் தன் பளபளக்கும் வாளால் வெட்டிச் சாய்க்கிறார். இதனை அறிந்த ஆங்கிலேயர்கள் பெரும்படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு, ஜெனரல் ஹாரிஸ் தலைமையில் ஓடாநிலைக்கு வந்தனர்.

இதனை அறிந்த சின்னமலை காங்கேயம் சென்று அங்கிருந்து வாழை வியாபாரி வேடம் புனைந்து, பழனி மலைத்தொடரில் உள்ள ஒருவீட்டில் தங்கி பாளையக்காரர்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்புரிந்து வந்தார். சின்னமலையை வலைவீசி தேடினர். இனிமேல் சின்னமலையைவஞ்சகத்தால் தான் வீழ்த்தமுடியும் எனநினைத்த ஆங்கிலேயர்கள், சின்னமலையின் சமையல்காரனான நல்லப்பனை நாடினர். நல்லப்பனும், சின்னமலை இருக்கும் இடத்தை கூற உடனே பழனிக்கு விரைந்து சென்று சின்னமலையைக் கைது செய்தனர்..!