நேற்று (27.07.1975) யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா துரோகி என்று சுட்டுக் கொல்லப்பட்ட நாள் ஆகும்.

இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் “சிங்கள அரசுடன் இணக்கத்தில் இருந்து தமிழர்களுக்கு நலன்கள் பெற்று தர விரும்பிய” மேயர் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்ட நாள் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் ஆச்சரியம் இல்லை.

ஏனெனில் துரையப்பாவை “துரோகி” என்று சுட்டுக் கொல்லச் சொன்னவர்களே இன்று துரையப்பாவை சுட்டுக் கொன்றது தவறு என்கிறார்கள். இவர்களுடைய பேச்சைக் கேட்டு துரையப்பாவை கொல்வதற்கு பல தடவை முயன்றவர் தியாகி சிவகுமாரன். இப்போது துரோகிகள் தியாகிகளாகவும் தியாகிகள் துரோகிகளாகவும் மாறும் காலம்.

எனவே துரையப்பா தியாகியாகவும் சிவகுமாரன் துரோகியாகவும் மாற்றப்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் வேடிக்கை என்னவெனில் அந்த காலத்தில் துரோகிகளை தேடி தேடி சுட்டுக்கொன்ற அண்ணன் ஒருவர் அண்மையில் ரிவி பேட்டி ஒன்றில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு துரோகி என்ற சொல்லையே தமிழில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

சரி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக நீக்குங்கள். இனி துரோகிகளை “விசுக்கோத்துகள்” என்று அழைத்துக் கொள்வோமா? இப்போது எமது கேள்வி என்னவெனில், தமது சுயநலன்களுக்காக ஒரு விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுப்பவர்களை என்னவென்று அழைப்பது? அவ்வாறு காட்டிக் கொடுப்பவர்களை என்ன செய்ய வேண்டும்? அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடுதலைப் போராட்டம் தோல்வியடைய விட்டுவிட வேண்டுமா? யாராவது பதில் தருவீர்களா? குறிப்பு- யாராவது தவறாக தண்டிக்கப்பட்டிருந்தால் அதனை தாராளமாக சுட்டிக் காட்டுங்கள்.

அதைவிடுத்து அதற்காக துரோகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கூற முற்படாதீர்கள்.

25 Shares