நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்..!

0
30

தமிழ் திரைப்பட நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ், மாரடைப்பால்  மரணமடைந்தார். அவருக்கு வயது 46.
இலங்கை கண்டியில் 1973ம் ஆண்டு பிறந்து, 1976ம் ஆண்டு தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு இடம் பெயர்ந்தவர் ஜே.கே. ரித்தீஷ்.

2007ம் ஆண்டு, நடிகர் சின்னி ஜெயந்த் இயக்கிய ‘கானல் நீர்’ எனும் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், ‘நாயகன்’, ‘பெண்சிங்கம்’ , ‘எல்கேஜி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
2009 லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக பதவி வகித்தார்.
2014ம் ஆண்டு தி.மு.க-வில் இருந்து விலகி, அ.தி.மு.க-வில் இணைந்தார். அத்துடன், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முக்கிய பதவி வகித்து வந்தார்.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பிரச்சாரம் செய்வதற்காக ராமநாதபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று (13ம் தேதி) ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய ரித்தீஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, உறவினர்கள் அவரை  மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக  தெரிவித்தனர்.

ரித்தீஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எல்கேஜி’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதுவே இவரது கடைசி படமாக அமைந்து விட்டது.
– தமிழக செய்தியாளர் ப.ஞானமுத்து

10 Shares