20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதன்படி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் தோல்வி கண்ட (1-2) பாகிஸ்தான் அணி (135 புள்ளிகள்) 3 புள்ளி சரிந்து முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை இழந்த (1-2) இந்திய அணி (124 புள்ளிகள்) 2 புள்ளி குறைந்து 2-வது இடத்தில் தொடருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்ற தென்ஆப்பிரிக்க அணி (118 புள்ளிகள்) 2 இடங்கள் அதிகரித்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி விட்டு 3-வது இடத்துக்கு ஏற்றம் கண்டது.

இங்கிலாந்து அணி (118 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தையும், ஆஸ்திரேலிய அணி (117 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தையும் பெற்றுள்ளன. நியூசிலாந்து (116 புள்ளிகள்) 4 புள்ளி அதிகரித்து 6-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் (101 புள்ளிகள்) 7-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (92 புள்ளிகள்) 8-வது இடத்திலும், இலங்கை (87 புள்ளிகள்) 9-வது இடத்திலும், வங்காளதேசம் (77 புள்ளிகள்) 10-வது இடத்திலும், ஸ்காட்லாந்து (62 புள்ளிகள்) 11-வது இடத்திலும், ஜிம்பாப்வே (55 புள்ளிகள்) 12-வது இடத்திலும், நெதர்லாந்து (50 புள்ளிகள்) 13-வது இடத்திலும் நீடிக்கின்றன. நேபாளம் (43 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 14-வது இடத்தையும், ஐக்கிய அரபு அமீரகம் (43 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 15-வது இடத்தையும் பெற்றுள்ளன. ஹாங்காங் (42 புள்ளிகள்) 16-வது இடத்திலும், ஓமன் (39 புள்ளிகள்) 17-வது இடத்திலும், அயர்லாந்து (34 புள்ளிகள்) 18-வது இடத்திலும் தொடருகின்றன.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (885 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ (825 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் (806 புள்ளிகள்), வெஸ்ட்இண்டீஸ் வீரர் இவின் லீவிஸ் (751 புள்ளிகள்) முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் (745 புள்ளிகள்) ஒரு இடம் அதிகரித்து 5-வது இடமும், பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான் (700 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 6-வது இடமும், இந்திய வீரர் ரோகித் சர்மா 3 இடம் ஏற்றம் கண்டு (698 புள்ளிகள்) 7-வது இடமும், இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹாலெஸ் (697 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 8-வது இடமும், இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் (688 புள்ளிகள்) 2 இடம் முன் னேறி 9-வது இடமும், இந்திய வீரர் லோகேஷ் ராகுல் (677 புள்ளிகள்) 3 இடம் சரிந்து 10-வது இடமும், இந்திய வீரர் ஷிகர் தவான் (671 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 11-வது இடமும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (655 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 12-வது இடமும், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் (649 புள்ளிகள்) 4 இடம் சரிந்து 13-வது இடமும், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷசாத் (647 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 14-வது இடமும், ஐக்கிய அரபு அமீரக வீரர் ஷாய்மான் அன்வர் (643 புள்ளிகள்) 2 இடம் முன்னேறி 15-வது இடமும், ஆஸ்திரேலிய வீரர் டார்சி ஷார்ட் (631 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 16-வது இடமும், தென்ஆப்பிரிக்க வீரர் பாப் டுபிளிஸ்சிஸ் (617 புள்ளிகள்) 3 இடம் முன்னேறி 17-வது இடமும், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் (610 புள்ளிகள்) 18-வது இடமும், ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகட்சா (599 புள்ளிகள்), இந்திய அணி கேப்டன் விராட்கோலி (599 புள்ளிகள்) 4 இடம் சறுக்கி 19-வது இடமும் இணைந்து பெற்றுள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் (793 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி கடைசி 20 போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (728 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்தபட்ச தரநிலையாகும். பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் (720 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்தையும், பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் (705 புள்ளிகள்) 5 இடம் முன்னேறி 4-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் (676 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா (670 புள்ளிகள்) 6-வது இடத்தையும், வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (658 புள்ளிகள்) 7-வது இடத்தையும், நியூசிலாந்து வீரர் சோதி (657 புள்ளிகள்) 4 இடம் சரிந்து 8-வது இடத்தையும், பாகிஸ்தான் வீரர் பஹீம் அஷ்ரப் (655 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 9-வது இடத்தையும், நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னெர் (638 புள்ளிகள்) 4 இடம் முன்னேறி 10-வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி (630 புள்ளிகள்) 11-வது இடத்தையும், ஐக்கிய அரபு அமீரக வீரர் முகமது நவீத் (628 புள்ளிகள்) 3 இடம் முன்னேறி 12-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் பில்லி ஸ்டான்லேக் (625 புள்ளிகள்) 13-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் பிளங்கெட் (620 புள்ளிகள்) 2 இடம் முன்னேறி 14-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டை (615 புள்ளிகள்) 2 இடம் அதிகரித்து 15-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டான் (611 புள்ளிகள்) 2 இடம் ஏற்றம் கண்டு 16-வது இடத்தையும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் (609 புள்ளிகள்) 6 இடம் சறுக்கி 17-வது இடத்தையும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் (608 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 18-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் (602 புள்ளிகள்) 9 இடம் சரிந்து 19-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி (595 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 20-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யா 39 இடங்கள் முன்னேறி 58-வது இடம் பெற்றுள்ளார்.

0 Shares