இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ள மிலன் நகரில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு படிக்கும் 50–க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் கண்காணிப்பாளர்கள், அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு பள்ளி பஸ்சில் புறப்பட்டனர்.

பஸ் டிரைவர் உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லாமல் வேறு வழியில் பஸ்சை ஓட்டி சென்றார். இது குறித்து மாணவர்களும், கண்காணிப்பாளர்களும் கேள்வி எழுப்பியபோது டிரைவர் கத்தியை காட்டி மிரட்டினார். இதையடுத்து பஸ்சில் இருந்த ஒரு மாணவர் செல்போன் மூலம் தனது பெற்றோருக்கு இதுபற்றி தெரியப்படுத்தினார். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த பஸ்சை தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால் போலீஸ் வாகனங்களை மோதிவிட்டு சென்ற பஸ், சிறிது தூரம் சென்று நின்றது. அதன் பின்னர் பஸ்சில் இருந்து இறங்கிய டிரைவர் பஸ்சுக்கு தீவைத்தார். பஸ் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. எனினும் போலீசார் விரைந்து செயல்பட்டு பஸ்சில் இருந்து மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை பத்திரமாக மீட்டனர். இதனால் அவர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பினர். எனினும் 10–க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புகையால் லேசான மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையில் மாணவர்களை கடத்தி பஸ்சுக்கு தீவைத்த 47 வயதான டிரைவரை போலீசார் கைது செய்தனர். செனகல் நாட்டை சேர்ந்த இவர் இத்தாலியின் அகதிகள் கொள்கை மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் நிகழும் படகு விபத்துகளில் அகதிகள் மரணம் அடைவது தொடர்பாக தனது கோபத்தை வெளிப்படுத்தவே இப்படி செய்தது தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.