உயிர் பிரிந்த ஓர் உடலைப் பார்க்க நேரும்போதெல்லாம் மனத்தில் துயரம் பெருகுகிறதா என்ன!

ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மரணங்கள் எல்லாம் நமக்குத் துயரத்தைப் பரிசளிக்கின்றதா என்ன!

முகத்தைக் கருப்புத்துணியால் மறைக்காமல் கைகள் கட்டப்பட்ட ஒருவனின் தலை அறுபடுவதை நாம் பார்க்கவில்லையா என்ன!

போர் விமானங்களில் இருந்து பொழிந்த குண்டுமழையில் உடல்கள் சிதறிச் சாவதைப் பார்த்துக்கொண்டே இரவு உணவை நாம் சுவைக்கவில்லையா என்ன!

தனிமையில் அகப்பட்டுக்கொண்ட சிறுமிகளும் பெண்களும் வல்லுறவு செய்யப்பட்டு வீதிகளில் குப்பையென வீசப்பட்ட செய்தியைக் கேட்டபின் நாம் அதற்காக ஏதேனும் செய்தோமா என்ன!

ரிஸானாக்கள் தலைகள் வெட்டப்படும்போது ஜோதி சிங் பாண்டேக்கள் பாதுகாப்பின்றி உயிரை இழக்கும்போது வினோதினிகளின் முகங்களை அமிலம் சிதைக்கும்போது நாம் நம்முடைய மனச்சாட்சியோடு போராடினோமா என்ன!

ஈழமே வீழ்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுகையில் நாம் கேளிக்கைகளையும் கொண்டாட்டங்களையும் தவிர்த்துப் போராட்டங்களில் இறங்கினோமா என்ன!

என்றாலும் மரணத்தைக் கொறித்த அந்தப் பனிரெண்டே வயதான பால்முகம் மாறாத பாலகன் பாலச்சந்திரனின் உயிரற்ற உடலைப் பார்க்கும்போது நெஞ்சம் விம்முகின்றதே அய்யோ… தமிழா.