காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, காலைவாருதல் என துரோக அரசியலுக்கே உரித்தான அஸ்திரங்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கமீது பல தடவைகள் ஏவப்பட்டிருந்தாலும் – ஒருபோதும் அரசியல் சமர்களத்திலிருந்து புறமுதுகுகாட்டி அஞ்சி ஓடி ஒளிந்த வரலாறு அவருக்கு கிடையாது என ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் மார்தட்டிக்கொள்கின்றனர்.

அரசியலில் வெட்டு, குத்து என பல பக்கங்களையும் பகுத்தறிந்து வைத்துள்ள அவர், தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாக மாற்றி – சவால்களை முறியடித்து சோதனையைக்கூட சாதனையாக மாற்றியமைக்கும் அரசியல் த(ம)ந்திரம் கற்ற மூத்த அரசியல்வாதியெனவும் பாராட்டு மழை பொழிகின்றனர்.

இலங்கை அரசியலில் இன்றளவிலும் ‘குள்ளநரி’ என விளிக்கப்படுகின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பயணத்தையும், ஜனாதிபதி தேர்தல்களில் அவர் போட்டியிட்டுள்ள பின்னணியையும் ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

பியகம தொகுதியில் போட்டி

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தில் கல்வி பயில்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியுடன் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரணில் விக்கிரமசிங்க, 1970 இல் செயற்பாட்டு அரசியலில் குதித்த பின்னர் களனி தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதன்பின்னர் பியகம தொகுதி அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

1977 ஜுலை 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலுள்ள பியகம தொகுதியில் – கன்னி தேர்தலை எதிர்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, 22 ஆயிரத்து 45 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற அரசியல் பயணத்தையும் வெற்றிகரமாக ஆரம்பித்தார்.

இதனால் 28 வயதிலேயே ரணிலுக்கு பிரதி வெளிவிவகார அமைச்சுப் பதவியை வழங்கி ‘அதிகாரத்தால்’ அழகுப்படுத்தி அகம் மகிழ்ந்தார் அவரின் மாமனாரான அமரர். ஜே.ஆர். ஜயவர்தன.

இந்நிலையில் குறுகிய காலத்துக்குள்ளேயே அமைச்சரவையிலும் அடியெடுத்து வைத்த ரணிலுக்கு – இளைஞர் விவகாரம் மற்றும் தொழில் விவகார அமைச்சு வழங்கப்பட்டது.

கல்வி அமைச்சு உட்பட முக்கிய பதவிகளை வகித்த அவர், துறைசார் விடயங்களில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, பழமைகளை பாதுகாத்து, புதுமைகளையும் உள்வாங்கி பலரினது பாராட்டுகளையும் பெற்றார்.

1982 ஒக்டோபர் 20 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையில் முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜே.ஆரின் வெற்றிக்காக தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டதுடன், காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத் முதலி ஆகியோருடன் இணைந்து இரண்டாம்நிலை பிரிவையும் வலுப்படுத்தினார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் – ஜே.ஆர். ஜயவர்தன, டிசம்பர் 22 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி பாராளுமன்ற ஆயுட்காலத்தில் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடித்தார்.

இதனால் 1989 ஆம் ஆண்டுவரை பொதுத்தேர்தல் நடைபெறவில்லை. 1988 டிசம்பர் 19 ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணசிங்க பிரேமதாச களமிறங்கினார். அவரின் வெற்றிக்காகவும் ரணில் தீவிரமாக உழைத்தார்.

முதன்முறையாக பிரதமராக பதவியேற்பு

1989 பெப்ரவரி 15 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 86 ஆயிரத்து 477 வாக்குகளைப் பெற்று விருப்பு வாக்கு பட்டியலில் மூன்றாம் இடத்தைப்பிடித்து வெற்றிநடைபோட்டார்.

பிரமேதாசவின் அமைச்சரவையில் கைத்தொழில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சு அவரிடம் கையளிக்கப்பட்டதுடன் சபை முதல்வராகவும் செயற்பட்டார்.

1993 மே முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச சுட்டுக்கொல்லப்பட்டபின்னர் டி.பி. விஜயதுங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் 1993 மே 17 ஆம் திகதி முதல் 1994 ஆகஸ்ட் 19 ஆம் திகதிவரை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்தார்.

1994 ஆகஸ்ட் 16 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது. ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சியும் முடிவுக்கு வந்தது. எனினும், கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க 2 இலட்சத்து 91 ஆயிரத்து 194 வாக்குகளைப் பெற்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.

1994 இல் கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய்வீடு திரும்பிய காமினி திஸாநாயக்க பிரதான எதிர்க்கட்சி தலைவரானார்.

1994 நவம்பர் 09 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் காமினி திஸாநாயக்க போட்டியிட்டார்.

1994 ஒக்டோபர் 20 ஆம் திகதி எவரும் எதிர்பாராத வகையில் கொழும்பு, தொட்டலங்க பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின்போது படுகொலை செய்யப்பட்டார் காமினி திஸாநாயக்க.

இதனால் அவரின் பாரியாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்தது.

முதலாவது ஜனாதிபதி
தேர்தலில் போட்டி

1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக போட்டியிட்டார். எனினும், 51.12% வாக்குகளைப் பெற்று சந்திரிக்கா மீண்டும் ஜனாதிபதியானார். ரணிலுக்கு 42.71% வாக்குகளே கிடைத்தன.

அதன்பின்னர் 2000 ஒக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது. எனினும், ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 2001 டிசம்பர் 09 ஆம் திகதி ரணில் பிரதமரானார். 2004 ஏப்ரல் 2 ஆம் திகதிவரை பதவியில் நீடித்தார்.

நாடாளுமன்றத்தில் ஆயுட்காலம் முடிவடைவதற்குள்ளேயே நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கலைத்து 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.

ஐ.தே.க. ஆட்சியும் கவிழ்ந்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 3 இலட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

அதன்பின்னர் 2005 நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிட்டார். 47 இலட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்றார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பை புறக்கணித்ததால் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மஹிந்தவிடம் தோல்வியடைந்தார். 4,887,152 (50.29%)

2009 மே 19 ஆம் திகதி – மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதால் தெற்கில் மஹிந்தவுக்கான செல்வாக்கு கோலோச்சியது.

விட்டுக்கொடுப்புகள்

2010 ஜனவரி 26 ஆம் திகதி ஆறாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த களமிறக்கினார். அவருக்கு எதிராக எதிரக்கட்சிகளின் சார்பில் – இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா களமிறக்கப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் களமிறங்கவில்லை என்பதுடன், யானை சின்னத்துக்கு பதிலாக அன்னப்பறவை சின்னமே முன்னிலைப்படுத்தப்பட்டது. இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றிபெற்றார்.

2010 ஏப்ரல் 4 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணிலின் தலைமைத்துவத்தின்கீழ் யானை சின்னத்திலேயே ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிட்டது.

எனினும், மஹிந்த அரசாங்கமே வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்கு வங்கியிலும் சரிவு ஏற்பட்டது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 2 இலட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப் பெற்றார்.

அதன் பின்னர் உள்ளாட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை கட்டங்கட்டமாக நடத்தி தொடர் வெற்றியை மஹிந்த அணி பதிவுசெய்தது. இதனால் ரணிலின் தலைமைத்துவமும் ஐ.தே.க. உறுப்பினர்களால் சவாலுக்குட்படுத்தப்பட்டது.

முக்கிய சில உறுப்பினர்கள் கட்சியை கைவிட்டு சென்றனர். எனினும், சவால்களையெல்லாம் சமாளித்து தலைமைப் பதவியை தக்கவைத்துக்கொண்டார் ரணில்.

2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டியநிலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது. மஹிந்த அரசிலிருந்து வெளியேறிய சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுவேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

மைத்திரி ஜனாதிபதி, ரணில் பிரதமர் என்ற தொனியிலேயே பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரி வெற்றிபெற்றார். மஹிந்தவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யமும் சரிந்தது.

2015 ஜனவரி 9 ஆம் திகதி பிரதமராக ரணில் பதவியேற்றார். இதனால், மஹிந்தவின் அமைச்சரவையும் கலைந்தது.

2015 ஆகஸ்ட் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி 106 ஆசனங்களைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தேசிய அரசமைத்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5 இலட்சத்து 566 வாக்குகளைப் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.

2018 ஒக்டோபர் மாதம் ஆட்சிகவிழ்ப்பு சூழ்ச்சிமூலம் மஹிந்தவை, ஜனாதிபதி மைத்திரி பிரதமராக்கினார். எனினும், நீதிமன்றத்தைநாடி சவால்களையெல்லாம் சமாளித்து மீண்டும் பிரதமரானார் ரணில். நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் மண்கவ்வ செய்தார்.

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறும் இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறியாகவே இருந்தார். எனினும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததால், பங்காளிகள் விடாப்பிடியாக நின்றதாலும், நாட்டு மக்கள் சஜித்தை கோரியதாலும் மூன்றாவது முறையும் தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

எனினும், 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐக்கிய தேசியக்கட்சியை சார்ந்த உறுப்பினர் ஒருவரை வேட்பாளராக களமிறக்கும் வாய்ப்பு உதயமாகியுள்ளது.

1997 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் 7 தடவைகள் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. எந்தவொரு தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்ததில்லை. 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையும் படைத்துள்ளார்.

54 Shares