பொது தேர்தலை பயமின்றி நடத்த முன்வாருங்கள் உங்கள் திண்ணை மட்டுமல்ல பண்ணையே காலியாகும் மனோ கணேசனுக்கு கணபதி கனகராஜ் பதில்

தோல்வி அச்சத்தில் தேர்தலை பின்போட்டு வரும் பிற்போக்கு சிந்தனையை கைவிட்டு பொது தேர்தலை ஒன்றுக்கு வருவீர்களானால் உங்கள் திண்ணை மட்டுமல்ல பண்ணையும் சேர்ந்து காலியாகுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார் .

கூட்டு ஒப்பந்தம் கைசாத்திட்ட ஒரு வாரத்திற்கு பின் தூக்கத்திலிருந்து எழும்பி கூட்டு ஒப்பந்தத்தை கூட்டு களவாணி ஒப்பந்தம் என்றீர்கள், 140 ரூபாவை வாங்கியே தீருவோம் அல்லது அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்றீர்கள், பின்னர் 50 ரூபாவிற்கு இணங்கியதாகவும் அதுவும் பாக்கி பணத்துடன் பெற்றுக் கொடுக்கப்போவதாக சொன்னீர்கள், இதை வரவு செலவு திட்டத்தில் நிதி அமைச்சர் அரசாங்க பணத்திலிருந்து வழங்கும் வரலாற்று நிகழ்வாக அமையும் எனவும் அறிவித்தீர்கள்.

உங்களுடைய அரசியல் கூட்டாளி அமைச்சர் திகாம்பரமே 140 கொடுக்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு முதலில் முதலாம் திகதியும் பின்னர் 5ம் திகதியும் காலகேடு விதித்தார். ஆனால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக சொல்லவே இல்லை என்று தற்போது மறுதலிக்கின்றார்கள் .

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பிற்கு முன் 50 ரூபா சம்பள உயர்வை கொடுப்போம் என்பது வீட்டிற்குள் விருந்து வைத்துக்கொண்டிருப்பவர்கள் வெளியில் இருந்து கையேந்தி கொண்டிருப்பவர்களிடம் பந்தி முடிந்தபின் மிச்சம் மீதி
இருந்தால் தருகிறேன் என்பதற்கு ஒப்பானதாகும்.

இந்த 50 ரூபாவை முதலாம் வாசிப்பில் அறிவித்திருந்தால் அது உங்கள் அரசியல் பலத்திற்கு கிடைத்த வெகுமானம் என கருதலாம். ஆனால் கடைசி பந்தியிலே இடம் கிடைக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என்பது அவமானமாக தெரியவில்லையா?

தோட்டத் தொழிலாளருக்கு 50 ரூபா அலவன்ஸ் வழங்குவதற்கு தேயிலை சபையிலுள்ள நிதியை பயன்படுத்தவுள்ளதாக பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் கூறுகிறார். வரவு செலவு
திட்டத்துடன் தொடர்பில்லாத தேயிலை சபையின் நிதியை பயன்படுத்துவதற்கு ஏன் வரவு செலவு திட்ட மூன்றாம் வாசிப்பு வரை காத்திருக்க வேண்டும்? அத்துடன் தேயிலை
சபையிலுள்ள நிதியை உடணடியாக வழங்கக்கூடிய வாய்ப்பிருந்தும் எதிர்வரும் மே மாதத்திலிருந்தே இந்த 50 ரூபா சம்பளத்துடன் சேர்க்கப்படுமென கூறப்படுவதன் உள்நோக்கம் என்ன? தேர்தல் திகதிக்காக காலம் தாழ்த்தும் தந்திரத்தை
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்திலும் காட்டும் அடிமட்ட அரசியல் இது என்பதை மலையக மக்கள் நன்கு அறிவர்.

இலங்கை வரலாற்றில் தேர்தல்களை பின்போடுவதில் சாதனை படைத்துவரும் இந்த அரசாங்கத்தை பாதுகாத்து வருவதனாலேயே அமைச்சர் மணே கணேசனின் திண்ணையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. விரைவில் பொது தேர்தல் ஒன்றுக்கு உங்கள் அரசாங்கத்தை கொண்டு வாருங்கள் உங்கள் திண்ணை மட்டுமல்ல பண்ணையும் சேர்ந்து காலியாகும். என கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.