ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்ட முரணாணது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு, ஸ்ரீலங்காவின் வரலாற்றில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தியுள்ள முக்கியமான தீர்ப்பாகும். இத்தீர்ப்பின் அடிப்படையில் மஹிந்த பதவி விலகியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக மாற்றப்பட்டுள்ளார்.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் பூரிப்படைந்துள்ளனர்.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவைக்கு தன்னால் பதவி வழியாக தலைமையேற்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் முடிந்தால் செய்துகாட்டுங்கள் என்று சாவாலும் விட்டுள்ளார். இதனால் எதிர்காலத்தில் புதிய அமைச்சரவை எடுக்கவுள்ள எந்தவொரு தீர்மானமும் மைத்திரியின் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது திண்ணம்.

இத்தகைய இடர்பாடுகளுக்கு மத்தியில் த.தே.கூட்டமைப்புக்கு வாய் மூலமாக வழங்கியுள்ள வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்ற முடியாத நிலை ரணிலுக்கு ஏற்படும். ஆனால், தற்பொழுதும் கூட்டமைப்பின் ஊடான தமிழ் மக்களின் வாக்குப் பலம் மட்டுமே தெற்கின் அரசாங்கத்தை நிர்ணயித்துள்ளது என்பது வெளிப்படையானது.

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டதாகக் கூறி ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்ற த.தே கூட்டமைப்பிற்கும் ஐ.தே.கட்சிக்கும் நீண்டகாலமாக சிறைகளில் வேண்டுமென்றே தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் இருக்கின்றமை வேடிக்கையான விடயமாகவே பார்க்க வேண்டியுள்ளது. ‘புண் இருந்தால்தானே பிச்சை எடுக்க முடியும்’.

இலங்கையில் ரணில் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கம் தற்போதய இப்பிணக்கிற்கான நிரந்தரத் தீர்வாக அமையாது. மாறாக நடப்புப் பாராளுமன்ற ஆட்சிக்காலத்திற்கு முன்னதாகவே பொதுத்தேர்தல் ஒன்றினை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இந்த விடயம் தெரிந்திருந்தும் த.தே.கூட்டமைப்பினர் ரணிலுக்கு ஆதரவளித்து கோமாளித்தனமாக அரசியல் ஆதாயம் தேடியுள்ளனர். 
இதுவும் தமிழ்த் தலைமைகளின் வரலாற்றுத் தவறுதான் என்றால் மிகையாகாது.

ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதற்கான அனுமதியை கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கோரிப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கடந்த பொதுத்தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பளிக்க மறந்துள்ளனர். இதன் வெளிப்பாடாக இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்களின் விரக்திக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலை தொடருமாயின் பொதுத்தேர்தலிலும் கூட்டமைப்பு படுதோல்வியையே சந்திக்கும்.

‘ரணிலின் அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. வெளிநாடுகளின் அதிகரித்துள்ள தலையீடுகளால்  நாட்டின் இறமைக்குப் பங்கம் ஏற்படுமாறு நடந்துள்ளது. கூட்டமைப்புடனும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடனும் கைகோர்த்து நாட்டை அழிக்க முற்படுகின்றனர். நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளது.’ இதுபோன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களால் தெற்கில் ஐ.தே.கட்சிக்கான மக்கள் ஆதரவும் கணிசமான அளவு சரிவடைந்துள்ளது. 

இதேவேளை இவ்வாறான ரணிலின் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதால் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கும் சரிந்துள்ளது. 
இதனால் வடக்குக் கிழக்கில் கூட்டமைப்பும் தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள முடியாத நிலையில் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதிலேயே குறியாக உள்ளனர். இதற்காக ஜனநாயகம் என்ற போர்வைக்குள் நீதி மன்றத்தின் அரவணைப்புடன் எஞ்சிய இருவருடங்களும் தூங்கிக்கொண்டே உழைப்பதற்கான யுத்திகளுடன் கனகச்சிதமாக நகர்கின்றனர்.

குறிப்பாக தமிழர் தாயகத்தில் உடனடியாகப் பொதுத்தேர்தல் ஒன்றினை எதிர்கொள்ள முடியாமல் இருக்கின்ற த.தே.கூட்டமைப்பு நிபந்தனையற்ற முறையில் ரணிலுக்கு ஆதரவளித்துள்ளது. இந்த வியடம் கூட்டமைப்பை அகலபாதாளத்தில் வீழ்த்துவதற்கும் வழிவகுக்கலாம்.

ஆனால், தெற்கினைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தைத் தீர்மானிக்கின்ற பிரதான சக்தியாக உருவாகியுள்ள நிலையில், இதனை சிங்களக் கட்சிகள் விரும்புவதற்கு வாய்ப்பில்லை. கூட்டமைப்பின் தலையீடு இல்லாத அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் நோக்குடன் பொதுத்தேர்தல் ஒன்றினை நடத்தி, அறுதிப் பொரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதையே தெற்கில் இரு பிரதான அரசியல் கட்சியினரும் விரும்புகின்றனர்.

இதனால் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டிகளுக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் இப்பிரச்சினை தீர்ந்துவிடாது. 

தற்பொழுதுதான் இப்பிரச்சினை உச்சடைந்துள்ளது. ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் எதிர்காலத்தில் தன்னிடமுள்ள உச்ச அதிகாரங்களை ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் மீது திணிப்பதற்கு முயற்சிப்பார். மேலும் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதுள்ள காழ்ப்புணர்வை வெளிப்படுத்தவும் தயங்கமாட்டார். இதனால் தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் அரசியல் பிணக்குகளுக்கு பகுதியளவிலேனும் தீர்வு காண்பதற்கு முடியாதநிலை ஏற்படலாம்.

இந்நிலையில், தமிழ் மக்களின் பிணக்குகள் இந்த அரசாங்கத்திலும் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அற்றுப்போயுள்ளது. தேர்தல் ஒன்று வருமாயின் கூட்டமைப்பின் பலம் கணிசமான அளவு சரிவடையும். இனால் தற்பொழுது உள்ளதைப் போன்று கூட்டமைப்பால் தெற்கில் அதிகாரத்துடன் பேரம்பேச முடியாத நிலையும் ஏற்படலாம்.

இது இவ்வாறிருக்க, ‘தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அரசியல் ரீதியான பிணக்குகள் தொடர்பாக பேசுவதற்கும் தீர்வுகளை அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஊடாகத் முன்னைப்பதற்கும்’ தனக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கமாறு ஜனாதிபதி சம்மந்தனிடம் கேட்டுள்ளார். இதற்காக அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது நடுநிலமை வகிக்குமாறும் கோரியுள்ளார். 

ஆனால் கூட்டமைப்பினர், குறிப்பாக சம்பந்தரின் தலைமை இதனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. மாறாகத் தெற்கில் எந்தவொரு செல்வாக்கும் இல்லாத ரணில் விக்கிரமசிங்காவைத் தூக்கி நிறுத்தியுள்ளனர்.

இதற்கு தமிழ் மக்களிடம் அனுமதி கோரியுள்ளார்களா? இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா? இந்த கோமாளித்தனத்திற்கு கூட்டமைப்பிற்குக் கிடைத்த சன்மானம் என்ன? இதுபோன்ற வினாக்களுக்கு எதிர்காலம் பதில் கூறும்வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பொறுத்திருக்க வேண்டும். 

இந்த இடத்தில் மக்கள் ஆணைக்கு விரோதமாகச் செயற்படுவதும் முறையற்ற வகையில் சொத்துக்களைச் சேர்ப்பதும் தமிழ்த் தலைமைகளுக்கு புதிய விடயமல்ல என்றுதான் கூற வேண்டியுள்ளது.

இராவணன்.

55 Shares