மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கையில் பாம்புடன் தொழிலாளி ஒருவர் அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம், விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ராசாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (42). இவருடைய மனைவி சந்தோஷ்(32). இவர்கள், கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (14ம் தேதி), ராசாப்பாளையத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கரும்பு வெட்டுவதற்காக எருமனூருக்குச் சென்றனர். 

அவர்களுடன் வீராசாமி – சந்தோஷ் தம்பதியினரும் சென்றனர். அங்கு ஒரு தோட்டத்தில் கரும்புகளை வெட்டி, கட்டுக்கட்டாக கட்டினர். பின்னர் அந்த கட்டுகளை, சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைப்பதற்காக டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

வீராசாமி மனைவி சந்தோஷ், ஒரு கரும்பு கட்டை தூக்க முயன்றார். அப்போது, அதனுள் பதுங்கி இருந்த ஒரு பாம்பு சந்தோஷின் இடது காலில் கடித்தது. அடுத்த சில நொடிகளில் அவர் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வீராசாமி, ஓடிவந்து தனது மனைவியை தூக்கினார்.

அந்த சமயத்தில், சந்தோஷை கடித்த பாம்பு அங்கிருந்து ஊர்ந்து சென்றது. உடனே, வீராசாமி அந்த பாம்பைப் பிடித்தார். இதையடுத்து வீராசாமி, தனது மனைவியையும் அந்த பாம்பையும் தூக்கிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் கையில் வைத்திருந்த பாம்பை காட்டி, ‘இந்த பாம்புதான் எனது மனைவியை கடித்தது. அதற்கான சிகிச்சையை உடனடியாக வழங்குங்கள்’ எனக் கூறினார். சுமார் 4 அடி நீளமுள்ள அந்த பாம்பு, கட்டுவிரியன் வகையைச் சேர்ந்தது என்று தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள், சந்தோஷுக்கு உரிய சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து வீராசாமி கூறுகையில், “எனது மனைவியை கடித்தது எந்த வகையான பாம்பு என்று தெரியவில்லை. எனவே, அந்த பாம்பை கொண்டுவந்து டாக்டர்களிடம் காண்பித்தால், அது எந்த வகையான பாம்பு என்று தெரிந்துவிடும். அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிப்பார்கள் என்பதற்காகத்தான் அந்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டுவந்தேன்” என்று கூறினார். இந்த சம்பவத்தால், மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

(தமிழக செய்தியாளர் ப.ஞானமுத்து)