“புதிய அரசமைப்பு வேண்டாம் எனவும், அது நாட்டைத் துண்டாக்கும் எனவும் நாட்டு மக்களைக் குழப்பி பரப்புரைகளை மேற்கொண்டுவரும் மஹிந்த ராஜபக்சவா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப்போகின்றார்? அவர் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முற்படுகின்றார்.”

– இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தாம் முன்னெடுத்த புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே குழப்பியது என்றும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுடன் பேச்சு நடத்தி தீர்வை வழங்குவேன் என்றும் கூறியிருந்தார்.

மஹிந்தவின் இந்தக் கருத்துத் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனமொன்றின் கொழும்பு செய்தியாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டபோது அவர் தெரிவித்தவை வருமாறு:-

“தமது ஆட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பல தடவைகள் பேச்சு மேசைக்கு அழைத்த மஹிந்த ராஜபக்ச, இறுதியில் அவர்களை ஏமாற்றினார். இதனால் அன்று தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டார்கள்.

இவ்வாறு செய்த மஹிந்த, எந்த முகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப்போகின்றார்?

ஆட்சியைப் பிடிப்பதற்காக மீண்டும் தமிழர்களை ஏமாற்றும் விதத்தில் கருத்துக்களை அவர் வெளியிடுகின்றார்.

ஆனால், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாடளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்சவுக்கு தமது வாக்குகளினால் பதிலடி கொடுத்து விட்டார்கள். அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.

புதிய அரசமைப்புக்கு தமிழ் மக்கள் மட்டுமல்ல மூவின மக்களுமே ஆதரவு வழங்கத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், மஹிந்த அணியினர் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள்தான் இனவாத ரீதியில் பரப்புரைகளை மேற்கொண்டு புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றார்கள்.

எனினும், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு விரைவில் கூடும். அதன்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்போம்” – என்றார்.