அலரிமாளிகையில் திருட்டுத்தனமான கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கடிதங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முற்றாக நிராகரித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களின் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய பல்வேறு கடிதங்கள் அலரிமாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அவ்வாறான எந்த கடிதங்களையும் அலரிமாளிகையில் தனது ஆட்சியின் காலத்தில் தயாரிக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இவ்வாறு முன்வைக்கப்பட்டுவருகின்ற குற்றச்சாட்டுக்கள் எந்தவித அடிப்படைக் காரணங்களும் அற்றவை எனக் கூறியிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் தனக்கு கீழ் பணிசெய்த அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ கடிதங்கள் மற்றும் ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதங்கள் அனைத்தும் அலரிமாளிகையிலும், பிரதமர் அலுவலகத்திலும் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியிருக்கின்றார்.