மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை படையினர்,  தாக்குதலுக்கு இலக்காகிய பின்னர், குழப்பமடைந்துள்ளனர் என்றும், இதனால் இராணுவத் தொடரணிக்குப் பாதுகாப்பு வழங்கும் பணி இரண்டு வாரங்களுக்கு மேலாக முடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 25ஆம் நாள் மாலியின் மத்திய பகுதியில், ஐ.நா வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் துருப்புக்காவி கவசவாகனம் ஒன்று கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியது.
இந்த தாக்குதலில், துருப்புக்காவி பலத்த சேதமடைந்ததுடன், அதில் இருந்த ஒரு மேஜரும், ஒரு சார்ஜன்ட்டும் என இரண்டு இலங்கை படையினர் உயிரிழந்தனர். மேலும் 6 சிறிலங்கா படையினர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்குப் பின்னர், ஐ.நா வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை இலங்கை படையினர் நிறுத்தியுள்ளனர்.
மாலியில் உள்ள இலங்கை படையினர் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதை அடுத்தே, கடந்த மாதம் 25ஆம் நாளுக்குப் பின்னர் வாகனத் தொடரணிக்குப் பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதையடுத்து, மீண்டும் ஐ.நா தொடரணிக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணிகளை மீள ஆரம்பிக்கும் வகையில், அதற்கு அங்குள்ள சிறிலங்கா படையினரை மனதளவில் தயார்படுத்துவதற்காக, இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் இருவர் நேற்று மாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் உத்தரவின் பேரின், மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க மற்றும் பிரிகேடியர் பிரதாப் திலகரத்ன ஆகியோரே மாலிக்கு சென்றுள்ளனர்.

அதேவேளை, மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை படையினரின் பாதுகாப்புக்கு தேவையான, இலத்திரனியல் கருவிகளை செயலிழக்கச் செய்யும் கருவிகளை இலங்கை அரசாங்கம் அவசரமாக நேற்று முன்தினம் மாலிக்கு அனுப்பியுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பாகிஸ்தானிடம் அவசரமாக கொள்வனவு செய்யப்பட்ட 8 கருவிகள், அங்கிருந்து நேற்று முன்தினம் மாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 Shares