நடைமேம்பாலம் பயன்படுத்த தகுதியானது என சான்று வழங்கிய தணிக்கை நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 மாநகராட்சி என்ஜினீயர்கள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தை இணைக்கும் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்தநிலையில் முதல் கட்ட விசாரணைக்கு பிறகு அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

  • இடிந்து விழுந்த நடைமேம்பாலம் பயன்படுத்த தகுதியானது என கட்டமைப்பு ஆய்வு நடத்தி சான்றிதழ் வழங்கிய பேராசிரியர் தேசாய் தணிக்கை நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தொடர்ந்து மாநகராட்சி, அரசு பணி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
  • முறையாக தணிக்கை செய்யாமல் தவறான தகவலை கொடுத்து பலரின் உயிர் போக காரணமான பேராசிரியர் தேசாய் தணிக்கை நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணி இடைநீக்கம்

  • தணிக்கை பணிக்காக அந்த நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்துக்கு கொடுத்த பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • அந்த நிறுவனத்தால் தணிக்கை செய்யப்பட்ட பாலங்கள், நடைமேம்பாலங்கள் அனைத்தும் மீண்டும் வேறு ஒரு நிறுவனத்தால் தணிக்கை செய்யப்பட உள்ளது. மேலும் தணிக்கை பணி நடந்த போது மாநகராட்சி சார்பில் மேற்பார்வை பணியில் இருந்த மாநகராட்சி நிர்வாக என்ஜினீயர் ஏ.ஆர்.பாட்டீல், துணை என்ஜினீயர் எஸ்.எப்.கக்குல்தே ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

துறை ரீதியான விசாரணை

இடிந்து விழுந்த நடைமேம்பாலம் கடந்த 2012-14-ம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட 6 ஆண்டுகளில் இடிந்து விழுந்ததால் அந்த பணியை செய்த ஆர்.பி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அந்த பணியை மேற்பார்வை செய்த ஓய்வுபெற்ற மாநகராட்சி தலைமை பொறியாளர் எஸ்.ஒ.கோரி, துணை தலைமை என்ஜினீயர் ஆர்.பி. தாரே, நிர்வாக என்ஜினீயர் ஏ.ஆர்.பாட்டீல், உதவி என்ஜினீயர் எஸ்.எப்.கக்குல்தே ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.