ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் நாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு நடைபெறவுள்ள ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கிணைவை கட்டியெழுப்புவதற்கான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் பங்குபற்றவுள்ளனர்.

3 நாட்கள் தஜிகிஸ்தானில் தங்கவுள்ள ஜனாதிபதி, மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள முக்கிய தலைவர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவாகிய நிலையில் இலங்கை அரசியலில் தற்போதும் பரபரப்பான சூழ்நிலையே நிலவுகிறது.

அத்தோடு முஸ்லிம் தலைவர்களின் ராஜினாமா, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் வெளிவரும் உண்மைகள், அமைச்சரவை இரத்து உள்ளிட்ட பல விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் மூலம் வெளிவரும் தகவல்கள் பெரும்பாலும் ஜனாதிபதிக்கு எதிராகவே அமைந்துள்ளன. இதன் காரணமாக குறித்த தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்துமாறு கோரியதுடன், தெரிவுக்குழுவின் உறுப்பினர்களை சந்திப்பதற்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும் அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமாக இன்று சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார். இவ்வாறான நிலையில் நாளை ஜனாதிபதியும் தஜிகிஸ்தான் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ்வாறு ஸ்திரமற்ற நிலையில் நாட்டை விட்டு ஜனாதிபதியும் பிரதமரும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.0


35 Shares