தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாஉழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

அந்தவையில் கடந்த வாரம் (19) பிரித்தானியா சௌதென்ட் பகுதியில் அமைந்துள்ள தமிழ் கல்வி கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் தைபொங்கலானது ”தைத் திருவிழா தமிழர் பெருவிழா” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

மதியம் 12 மணிமுதல் இரவு  வரை நடைபெற்ற இந்நிகழ்வானது   அகவணக்கத்துடன் ஆரம்பித்தது. தொடர்ந்து   மங்கள விளக்கினை தமிழ் கல்வி கலை  பண்பாட்டு கழகத்தின் ஆசிரியைகள் அனைவரும் ஏற்றிவைக்க பிரித்தானிய தேசியக்கொடி, தமிழீழ தேசியக்கொடி மற்றும் தமிழ் கல்வி கலை  பண்பாட்டு கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. 

அதனைத்தொடர்ந்து  கல்வி கலை  பண்பாட்டு கழகத்தினால் வருடாவருடம் மாணவர்களின் எண்ணங்களில் உதித்தவை வண்ணங்களாக வெளியிடப்பட்டுவரும் ‘மலரும் மொட்டுக்கள்’ எனும் நூல் வெளியீடு செய்துவைக்கப்பட்டதுடன் அனைத்து மாணவர்களுக்கும் நினைவுக்கேடயம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பரத நாட்டியம்  , பாடல்கள் , மேலைத்தேய நடனம், கவிதை, வில்லிசை என மாணவர்களின் சிறப்பான நிகழ்வுகள் நடைபெற்றிருந்ததுடன் ஈழத்து நாட்டுக்கூத்தான காத்தவராயன் சிந்துநடைக்கூத்தும் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்து  வருகின்ற மாணவர்களில் நடிப்பில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.