வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி
சமுதாயத்தை நாம் வேண்டுவது உங்கள் பரிதாபத்தையல்ல உங்கள் பங்குபற்றலையே  என்ற கருப்பொருளுடன் சீட்  (Seed) வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வானது பல்வேறு பிரிவுகளாக நடைபெற்று இறுதி நாள் நிகழ்வானது இன்று (03.02) வவுனியா தேக்கவத்தை விளையாட்டு மைதானத்தில் 2மணியளவில் ஆரம்பமாகி  நடைபெற்றது. 

இவ் விளையாட்டு நிகழ்வானது விளையாட்டு நிகழ்வாக மாத்திரம் அமையாமல் மாறாக விசேட தேவைக்குட்பட்டவர்களின் உரிமைகள் சார்பான விழிப்புணர்வும் அவர்களின் திறன்களை வெளிகொண்டு வருவதாகவும் அமைந்திருந்தது. 
கருத்தொன்றியுள்ள இவ் விளையாட்டு போட்டியை கௌரவப்படுத்தும் நோக்கில் விசேட மற்றும் பிரதம அதிதிகளாக வவுனியா கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க.சுவர்ணராஜா, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்,விளையாட்டு உத்தியோகத்தர், பாடசாலையின் அதிபர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ,அரச சார்பற்ற நிறுவனங்களான ஒகான் மற்றும் வரோட் நிறுவன உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் கொடியேற்றும் நிகழ்வினை தொடர்ந்து அணிநடைவகுப்பு இடம்பெற்று விளையாட்டுகள் நடைபெற்றிருந்தது. அத்துடன் இந்த விளையாட்டு நிகழ்வை திறன்பட நடாத்துவதற்கான நடுவர் குழாமை வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி வழங்கியிருந்தார்கள்.

இதில் இயற்கை வளப்பாதுகாப்புடன் பராம்பரிய முறைகள் மற்றும் அனைவரும்  ஒன்றிணைந்தால் உட்படுத்தல் சாத்தியம் என்கின்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் முகமாக இல்ல அமைப்புக்களும் வினோத உடை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் சாதாரண பாடசாலைகளுக்கு நிகராக நடைபெற்றது என்பது விசேட அம்சமாகும்.