புதுச்சேரியில், போக்குவரத்து போலீஸாரின் தொடர் சோதனையால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது இரு சக்கர வாகனத்தின் முன்புறம் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை ஒட்டி வைத்து வலம் வருகிறார்.
 
புதுச்சேரியில், உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை ஓட்டிச் செல்வோரை போலீஸார் ஆங்காங்கே மடக்கி சோதனை நடத்தி வருகின்றனர். இவர்கள் மேற்கொள்ளும் சோதனைக்கு எந்த ஒரு வாகன ஓட்டுனரும் தப்பிவிட முடியாது.
 
நகரப்பகுதியில், அருகருகே காவல் நிலையங்கள் இருப்பதால் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓரிடத்தில் நின்று சோதனை நடத்துகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால், அவர்களுக்கு கவர்னர் கிரண்பேடியின் அறிவுறுத்தலின் பேரில் ‘ஸ்பாட் பைன்’ விதிக்கின்றனர்.
 
இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஆவணங்களை காட்டிவிட்டுச் செல்வதற்குள் வாகன ஓட்டுனர்களுக்கு போதும் போதுமென்றாகி விடுகிறது. இதனால், அவசர வேலையாகச் செல்பவர்கள் தாங்கள் செல்லுமிடத்துக்கு உரிய நேரத்தில் சென்றடைய முடிவதில்லை. 
 
இதுபோன்ற தொடர் சோதனைகளால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி முத்துலிங்கம் பேட்டையைச் சேர்ந்த ஜூஸ் கடைக்காரரான மனோகரன் என்பவர், தனது இரு சக்கர வாகனத்தின் முன்பகுதியில் வண்டியின் ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை பெரிய அளவில் நகல் எடுத்து ஒட்டி வைத்தபடி வலம் வருகிறார். மனோகரனின் இந்த புதுமையான ஐடியா, புதுச்சேரி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.