மட்டக்களப்பு நகரிலிருந்து ஆறு கிலோமீற்றர் தூரத்திலுள்ள வவுணதீவு மற்றும் வளையிரவு ஆகிய பிரதேசங்களை இணைக்கின்ற வவுணதீவுப் பாலத்திலுள்ள காவல்சாவடியில், கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், நான்கு முன்னாள் போராளிகளுடன் பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் உயிருடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளமை விடுவிக்கப்பட்ட போராளிகள் மத்தியில் மீண்டும் ஒருவிதமான அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

மாவீரர்நாள் நிகழ்விற்கு கிழக்கில் விதிக்கப்பட்டிருந்த தடைகளால் அதிர்ப்தியடைந்த முன்னாள் போராளிகள், ஐரோப்பியத் தமிழர் அமைப்பு ஒன்றின் நெறிப்படுத்தலில் இப்படுகொலைகளைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த ஐவரும்  கைதுசெய்யப்பட்டள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைதாகியவர்களில் ஒருவர் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பொட்டம்மானுக்கு நெருக்கமானவர் எனவும் அவர் புலனாய்வுத்துறையின் சண்டை அணியில் இருந்தவர் எனவும் தெரியவருகின்றது.

ஆனால் இப்படுகொலையின் பின்னணியில் கருணாவின் அரசியல் கலந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றத்தில் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். கருணா அதனை மறுத்துள்ளதுடன் பொட்டம்மானுக்கு உயிர்கொடுத்து புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயிரூட்டி தெற்கில் சிங்களவர்கள் மத்தியில் புலிப்பூச்சாண்டி அரசியல் செய்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வல்வளைப்புச் சமரில் பொட்டம்மானும் வீரச்சாவடைந்துள்ளார் என முன்னர் சிங்கள இராணுவம் கூறியிருந்த நிலையில், அவருக்கு மீண்டும் கருணாவினூடாக உயிர் கொடுக்கப்பட்டுள்ளமை மஹிந்த சார்பான அரசியல் நகர்வு என்பது வெளிப்படையானது. இதற்காக இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டுள்னர். முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழ்மக்களை இராணுவம் அச்சுறுத்தியுள்ளது. சோதனைக் கெடுபிடிகளும் அதிகரிக்கப்பட்டவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இறுதி இனவழிப்புப் போரை நடத்திய இராணுவத் தளபதியும் தற்போதய இராணுவத்தளபதியும் பொட்டம்மான் இறந்துவிட்டதாக மீண்டும் கூறுகின்றனர். ஆனால் கருணா உயிர்கொடுக்கின்றார். இதன் ஊடாக இவ்விடயம் உற்றுநோக்கப்பட வேண்டியுள்ளது.

ஸ்ரீலங்காவின் அரசியலைப் பொறுத்தவரையில் நாடு சுகந்திரமடைந்த பின்னர் மாறிமாறி ஆட்சிக்குவந்த இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் பௌத்த சிங்களப் பேரினவாத இனவாதிகளாக தம்மைக்காண்பித்து, சிங்களமக்கள் மத்தியில் புலிப்பயத்தை ஏற்படுத்தி, சிங்கள இனத்தின் காவலர்களாகவே ஆட்சியைத் தக்கவைத்து வந்துள்ளன. ஆனால் புலிகள் அமைப்பின் பின்னடைவிற்குப் பின்னர் தெற்கில் இரு பிரதான சிங்கள அரசியல்கட்சிகளும் அறுதிப்பொரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்பொழுதுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் மீண்டும் தெற்கில் புலிப்பயத்தினை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான நகர்வுகளில் மஹிந்த சார்பான அரசியல்வாதியான கருணா ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

இத்தகைய அரசியல் முனைப்புக்கள் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளைப் பாதித்துள்ளது. போராளிகள் அனைவரும் மீண்டும் கைதுசெய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

இது இவ்வாறிருக்க, வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை விரும்பாத இதரகட்சிகளும் இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தி எதிர்காலத்தில் கூட்டமைப்பிற்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபடுவதற்கு எண்ணியிருக்கவும் வாய்ப்புள்ளது. கூட்டமைப்பு ரணிலின் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நிலையிலும் தமிழர் பகுதிகளில் இயல்பு வாழ்கை சீர்குலைந்துள்ளதாக தற்பொழுதும் சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இதனையே அவர்கள் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டமைப்பிற்கு எதிரான பரப்புரைக்கான கருவியாக பயன்படுத்தியுள்ளனர். இதில் அவர்கள் பகுதியளவில் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களுடைய அரசியல் கேளிக்கைகளுக்கு புலம்பெயர்ந்தோரும் ஆதரவளிக்கின்றனர். தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்மக்களின் ஒன்றிணைந்த பலத்தைச் சிதைத்து தங்களுடைய தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதே இவர்களுடைய நோக்கமாகும்.

எது எப்படியிருந்த போதிலும், வடக்கு கிழக்கில் எந்தவொரு சம்பவம் நடந்தாலும் அதற்கு முன்னாள் போராளிகள்தான் பொறுப்பு என்று கூறுகின்ற சிங்களத்தின் பாதுகாப்புத் திணைக்களம் இப்படுகொலையையும் அதேகண்ணோட்டத்திலேயே பார்த்துள்ளது. இதனால் போராளிகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எனவே இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் முதலில் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக புலத்தில் புலிகளின் பணத்தில் உல்லாசம் அனுபவிக்கின்றவர்கள் தாயக அரசியலில் தலையிடுகின்ற பொழுது அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டும்.

அதுசரி, இவர்களுக்கொல்லாம் அறிவிருந்திருக்குமாயின் போராடியவர்களின் வயிறை உலர்த்தி, புலிகளின் பணத்தை கொள்ளையடித்து,  கோத்தாவின் அடிவருடிகளின் அரசியலுக்கு தாரைவார்ப்பார்களா?

இராவணன்

2 Shares