ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது, இவ்விடயத்தை ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதத்தில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்களின் ஒப்பத்துடன் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று அதிகாலை ஜெனிவா புறப்பட்டார்.

இந்தக் கடிதத்தில் தற்போது சுவிஸில் தங்கி நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கையயாப்பமிடக்கூடும் என சில முக்கிய அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டன.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஏற்கனவே இக்கடிதத்தில் ஒப்பமிட்டுவிட்டனர் என்பது தெரிந்ததே.

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் இக்கடிதத்தில் ஒப்பமிடுவார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போதும், பின்னர் அவர் அதில் பின்னடித்தார் என்று செய்திகள் வெளியாகின.

எனினும், இந்த விவகாரத்தில் யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் எழுச்சி நிலை குறித்து புளொட்தரப்புக்கு விளக்கமளிக்கப்பட்டது எனவும் – அதன் பின்னர் அக்கடிதத்தில் ஒப்பமிட புளொட் தரப்பு இணங்கியது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி கடிதத்துடன் இன்று அதிகாலை எம்.கே.சிவாஜிலிங்கம் ஜெனிவா புறப்பட இருந்தமையால், இக்கடிதத்தின் மூலப் பிரதியை புளொட் தலைவர் த.சித்தார்த்தனிடம் நேரடியாகச் சமர்ப்பித்து அதில் ஒப்பம் பெறுவதில் சிக்கல் நிலைமை இருந்ததாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன

அதனால், இக்கடிதத்தின் பிரதியை மின்னஞ்சல் மூலம் சித்தார்த்தனுக்கு அனுப்பி, அவர் ஒப்பமிட்ட கடிதத்தின் பிரதியை மின்னஞ்சல் மூலமே பெற்றுக்கொண்டு, இன்று அதிகாலை விமானம் ஏறத் தயாராகிக் கொண்டிருந்தார் சிவாஜிலிங்கம்.

தற்போது ஜெனிவாவில் தங்கியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் இக்கடிதத்தில் ஒப்பம் பெறுவதற்கான பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் சில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்படி ஒப்பம் பெறப்படுமானால் ஜெனிவா விவகாரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்து விடப்படும் சூழல் ஏற்படும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அக்கட்சியுடன் இணைந்திருக்கும் ரெலோ, புளொட் போன்றவை அக்கட்சியை கைவிட்ட நிலைமை வந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.